உலகம்
Typography

இவ்வருடம் 2017 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வரும் சர்வதேச அணுவாயுதப் பரவல் தடை அமைப்பான ICAN இற்கு அறிவிக்கப் பட்டுள்ளது. அண்மைக் காலமாக அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே அணுவாயுதப் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

ICAN அமைப்பானது 2007 ஆம் ஆண்டு முதல் கடந்த 10 வருடமாக உலகளாவிய ரீதியில் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாக தன்னார்வ அடிப்படையில் அணுவாயுதப் பரவலைத் தடுக்கச் செயற்பட்டு வருகின்றது. இந்த அமைப்பில் 101 நாடுகளைச் சேர்ந்த 468 பங்காளர்கள் இணைந்து செயற்படுகின்றனர். ஆரம்பத்தில் உலகம் முழுவதும் கன்னிவெடிகளைப் பாவிப்பதைத் தடுக்கும்  பிரச்சார அமைப்பின் ஈர்ப்பால் இது தொடங்கப் பட்டது. தற்போது இந்த ICAN அமைப்புக்கு நடிகர் மைக்கேல் ஷீன், தலாய் லாமா, 1984 ஆம் ஆண்டு அமைதி நோபல் பரிசு வென்ற டெஸ்மொண்ட் டுட்டு, கலைத் துறையைச் சேர்ந்த ஐ வெய்வெய் மற்றும் முன்னால் ஐ,நா பாதுகாப்புச் செயலாளர் பான் கீ மூன் மற்றும் யோக்கோ ஒனோ ஆகியோர் தமது ஆதரவை அளித்த வண்ணம் உள்ளனர்.

அணுவாயுதத்தைத் தடுக்கும் ஐ.நா இன் ஒப்பந்தத்துக்கு இந்த வருடம்  ஜூலை மாதம் 122 நாடுகள் தமது ஆதரவைத் தெரிவித்ததற்கு பிரதானமாகச் செயற்பட்ட காரணத்தால் தான் ICAN இற்கு இம்முறை $1.1 மில்லியன் டாலர் பெறுமதியான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த அணுவாயுதத் தடை ஒப்பந்தத்தில் அணுவாயுத அபிவிருத்தி, பரீட்சித்தல், உற்பத்தி, ஏற்றுமதி, சேகரிப்பு போன்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் வடகொரியா தனது மிகச் சக்தி வாய்ந்த அணுவாயுதப் பரிசோதனையை மேற்கொண்டதை அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வடகொரியா ஆத்திரமூட்டும் விதத்தில் யுத்தத்தை ஆரம்பித்தால் அதனை முழுமையாக நாம் அழிக்கவும் தயங்க மாட்டோம் என்று சூளுரைத்திருந்தார்.

உலகில் தற்சமயம் கணிப்பிடப் பட்டுள்ள 14 905 சக்தி வாய்ந்த அணுவாயுதங்களிலும் 14 000 அணுவாயுதங்கள் ரஷ்யா மற்றும் அமெரிக்கா வசமுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை கடந்த வியாழக்கிழமை இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஜப்பானில் பிறந்து  பிரிட்டனில் குடியேறிய ஆங்கில எழுத்தாளர் கஸுவோ இஷிகுரோ என்பவருக்கு அறிவிக்கப் பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்