உலகம்
Typography

மியான்மாரில் இருந்து பௌத்த பேரினவாதத்தின் இனப்படுகொலை மற்றும் அடக்குமுறையில் இருந்து தப்பி இந்தியாவில் அகதிகளாகக் குடியேறி உள்ள 40 000 றோஹிங்கியா முஸ்லிம்களையும் நாடு கடத்த வேண்டுமென இந்திய உச்ச நீதிமன்றத்தில் சென்னை டிரஸ்ட் என்ற அமைப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக இந்த றோஹிங்கியா முஸ்லிம்கள் பல தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மியான்மாரின் ராக்கைன் மாகாணத்தின் பூர்வீக குடிகளான றோஹிங்கியாக்கள் பல தசாப்தங்களாக பௌத்த பேரினவாதத்தின் அரச போலிஸ் மற்றும் இராணுவ தரப்புக்களால் அடக்கி ஒடுக்கப் பட்டு இனப் படுகொலை செய்யப் பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் படகுகள் மூலமாகவும் தரை மார்க்கமாகவும் இலட்சக் கணக்கில் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இதேவேளை ராக்கைன் மாநிலத்தில் மியான்மார் இராணுவம் மற்றும் போலிசார் துணையுடன் றோஹிங்கியா முஸ்லிம்களின் கிராமங்களில் உள்ள வீடுகளும், மதத் தலங்களும், பள்ளிகளும் பௌத்தர்களால் தீ வைக்கப் படுவதாகவும் அங்கு வெளிநாட்டு ஊடகங்கள் எதுவும் அனுமதிக்கப் படுவதில்லை என்றும் உறுதியான சான்று வெளியாகி உள்ளது.

மியான்மாரில் வன்முறை அதிகரித்து வருவதால் அங்கு ஆன் சாங் சூ க்யி தலைமையிலான அரசுக்கு சர்வதேசத்தின் அழுத்தம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read