உலகம்
Typography

கடந்த ஜூன் மாதம் தீவிரவாத குழுக்களுக்கு கத்தார் பல விதங்களில் ஆதரவளித்து வருகின்றது என்ற குற்றச்சாட்டின் பெயரில் சவுதி அரேபியா உட்பட வளைகுடா நாடுகள் கத்தாருடன் தமது உறவை முறித்துக் கொண்டிருந்தன.

உலகில் எண்ணெய் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள நாடான கத்தாருடன் இந்த உறவு துண்டிப்பு பல சர்வதேச சந்தைகளையும் விமான சேவை நிறுவனங்களையும் கடுமையாகப் பாதித்தது. மேலும் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த விமானப் பயணிகள் கடும் சிரமங்களைச் சந்திக்க நேரிட்டது. இந்த நிலமை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கத்தாருக்கும் அரேபிய தேசங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிணக்கைத் தீர்க்க தான் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என அறிவிப்பு விடுத்துள்ளார்.

வியாழக்கிழமை வாஷிங்டனில் குவைத் அரசர் ஷேக் சபா அல் அஹமத் அல் ஜபார் அல் சபா உடன் இணைந்து நடத்திய கூட்டு செய்தியாளர் மாநாட்டின் பின் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கும் போது தனது முடிவைத் தெரிவித்த டிரம்ப் தான் தலையிடும் பட்சத்தில் விரைவான ஒரு ஒப்பந்தம் இரு தரப்புக்கும் இடையே எட்டப்பட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கத்தார் விவகாரத்தில் நடுநிலமை வகிக்கும் நோக்கில் இருந்த குவைத் அரசரும் அமெரிக்காவின் தலையீடு பயனளிக்கும் எனத் தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS