உலகம்
Typography

உலக அளவில் போருக்கு எதிராக மிக நீண்ட காலமாக நடுநிலை வகித்து வரும் நாடான சுவிட்சர்லாந்து தற்போது சூடு பிடித்திருக்கும் வடகொரிய விவகாரத்தில் மத்தியஸ்தராகச் செயற்பட முன் வந்துள்ளது.

இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை அறிக்கை வெளியிட்ட சுவிஸ் அதிபர் டொறிஸ் லெயுதார்ட் கூறுகையில் வடகொரிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அனைத்துத் தரப்பு அமைச்சுக்களையும் தலைமை தாங்கி ஒரு மத்தியஸ்தராக சுவிட்சர்லாந்து செயற்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே உள்ள யுத்த சூனியப் பிரதேசத்துக்கு தமது படைகள் புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவித்த லெயுதார்ட் சுவீடனுடன் இணைந்து சுவிட்சர்லாந்து ஒரு நடுநிலை நாடாக மிக நீண்ட காலமாகச் செயற்பட்டு வருவதை எந்த ஒரு தேசமும் மறுக்க முடியாது என்றும் கூறினார்.

மேலும் சீனாவும் அமெரிக்காவும் வடகொரிய விவகாரத்தில் மிகவும் அவசரப் பட்டு அளவுக்கு மீறி பதில் நடவடிக்கைக்கு தயாராகக் கூடாது என்றும் அவை தமக்கான பொறுப்புக்களைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்றும் லெயுதார்ட் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் மக்கள் சிரமப் படும் போதிலும் அந்நாட்டு அரசின் போக்கை பொருளாதாரத் தடைகள் மாத்திரம் தடுத்து நிறுத்தி விட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். வடகொரியா நேற்று தனது மிகப்பெரிய அணுகுண்டு பரிசோதனையை நிகழ்த்தியதை அடுத்து அவசர நடவடிக்கையாக கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்கவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் மற்றும் யுத்தக் கப்பல்களை வரவழைக்கும் விதத்தில் அமெரிக்காவுடன் தென்கொரியா பேச்சுவார்த்தை மேற்கொண்டது.

இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு மிக உகந்த நேரம் இது என பேர்ன் நகரில் லெயுதார்ட் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தினை அமெரிக்காவும் சீனாவும் எவ்வாறு கைக் கொள்கின்றனவோ அதைப் பொறுத்து தான் இனி வரும் கிழமைகளில் உலகின் போக்கே மாறக் கூடும். எனவே தான் நாமும் சுவீடனும் திரை மறைவில் வடகொரியாவுக்கும் மேற்குலகுக்கும் இடையே மத்தியஸ்தம் வகிக்க விரும்புகின்றோம் என சுவிஸ் அதிபர் குறிப்பிட்டார்.

மேலும் இப்பேச்சுவார்த்தைக்கு உகந்த ஒரு இடம் தெரிவு செய்யப் பட வேண்டும் எனவும் டுவிட்டர் மாத்திரம் போதுமான ஊடகம் அல்ல என்றும் கூட தனது அபிப்பிராயத்தை லெயுதார்ட் முன்வைத்துள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் தனது இளம் பருவத்தின் குறிப்பிட்ட ஒரு காலத்தில் சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரில் மாற்றுப் பெயரில் கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read