உலகம்
Typography

அண்மைய நாட்களில் தெற்காசியாவைப் பாதித்துள்ள கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இந்தியா, நேபால் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச்  சேர்ந்த 16 மில்லியன் சிறுவர்கள் மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளதாக யுனிசெஃப் (UNICEF) அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து தகவல் அளித்த தெற்காசியாவுக்கான யுனிசெஃபின் பிரதான பிராந்திய இயக்குனர் ஜீன் கோஹ் கூறுகையில் மில்லியன் கணக்கான சிறுவர்கள் தமது இல்லங்களையும், பள்ளிகளையும், நண்பர்களையும், அன்புக்குரிய குடும்ப உறவுகளையும் இழந்து தவிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியவாறு கனமழை தொடர்ந்து தெற்கு திசையில் முன்னேறி வருவதால் இன்னமும் மோசமான ஆபத்து வரவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட்டு மத்தியில் இருந்து பெறப்பட்ட புள்ளி விபரத்தில் மில்லியன் கணக்கான சிறுவர்களும் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப் பட்டுள்ளது மட்டுமல்லாது 1288 பேர் மரணமடைந்தும் உள்ளதாகத் தெரிய வருகின்றது. பல இடங்களில் பாதைகளும், பாலங்களும், ரயில்வே பாலங்களும் ஏன் விமான நிலையங்களுமே சேதமடைந்திருப்பதால் அங்கு செல்லக் கூடிய போக்குவரத்து மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் மில்லியன் கணக்கான சிறுவர்களுக்கு சுத்தமான நீர், தொற்று நோய் பரவாது பாதுகாக்கக் கூடிய ஏற்பாடுகள், உணவுப் பொதிகள் மற்றும் பாதுகாப்பாகத் தங்கும் வசதி என்பன உடனடியாகத் தேவைப் படுவதாக ஐ.நா ஏஜன்ஸியான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஐ.நா இன் சிறுவர்கள் அமைப்பான யுனிசெஃப் குறித்த 3 நாடுகளையும் சேர்ந்த அரச மற்றும் தனியார் மீட்புப் பணியாளர்களுடன் இணைந்து களத்தில் இறங்கி செயலாற்றி வருகின்றது. பல பாடசாலைகள் சேதம் அடைந்திருப்பதால் பல்லாயிரக் கணக்கான மாணவர்களுக்கு இன்னும் பல மாதங்கள் பள்ளிக்கு போக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் 4 வட மாநிலங்களில் மட்டும் மழை வெள்ளத்தால் 12.33 மில்லியன் சிறுவர்கள் உட்பட 31 மில்லியன் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 15 455 பள்ளிகள் முழுவதுமாக அல்லது பகுதியாக சேதமடைந்துள்ளன. மிக மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ள மாநிலங்களாக அஸ்ஸாம், பீஹார் மற்றும் உத்தரப் பிரதேஷ் என்பன விளங்குகின்றன.

வங்கதேசத்தில் 8 மில்லியன் மக்களும் நேபாளத்தில் 1.7 மில்லியன் மக்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்