உலகம்
Typography

இன்று ஞாயிற்றுக்கிழமை வடகொரியா தனது வரலாற்றில் மிகவும் சக்தி வாய்ந்த அணுகுண்டு பரிசோதனையான ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனையை நடத்தியுள்ளது. இது உலக அளவில் எதிர்ப்பு அலைகளை அதிகரித்துள்ளதுடன் கண்டனங்களையும் சம்பாதித்துள்ளது. ஐ.நா சபையின் அணுவாயுத கண்காணிப்புப் பிரிவு இது மிகவும் கவலைக்குரிய விடயம் என்றும் ரஷ்யா இது மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளன.

வடகொரிய ஊடகங்கள் வெளியிட்ட தகவலில் இந்த அணுகுண்டுப் பரிசோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும் இந்த அணுவாயுதத்தை நீண்ட தூர இலக்கு கொண்ட ஏவுகணைகளில் பொருத்தி ஏவ முடியும்  எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. வடகொரிய நேரப்படி பகல் 12:36 அளவில் வடகிழக்குப் பகுதியில் மேற்கொள்ளப் பட்ட இந்த அணுகுண்டு பரிசோதனையின் விளைவாக 6.3 ரிக்டர் அளவுடைய நில அதிர்வு ஏற்பட்டதாகவும் இது சீனாவுடனான எல்லைப் பகுதியில் உணரப் படக்கூடியதாக இருந்ததால் அப்பகுதியில் இருந்த மக்கள் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் கூட சில தகவல்கள் வெளியாகி உள்ளன. 2006 ஆம் ஆண்டு தொடக்கம் வடகொரியா நடத்திய 6 ஆவது அணுகுண்டு பரிசோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரியாவின் இந்த செய்கைக்கு மிக விரைவாகவும் வலிமையாகவும் பதில் நடவடிக்கை கொடுக்குமாறு ஐ.நா பாதுகாப்பு சபைக்கு பிரெஞ்சு அதிபர் எமானுவேல் மாக்ரோன் அழுத்தம் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச சமூகமும் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது எந்தவித நிபந்தனையும் இன்றி வடகொரியாவை பேச்சுவார்த்தை மேடைக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் பிரெஞ்சு அதிபர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் ஒரேயொரு நட்பு நாடும் ஐ.நா பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுமான சீனா கூட இது தவறான செயல் என விமர்சித்துள்ளதுடன் வடகொரியா மீது ஐ.நா சபை எடுக்கும் எந்தவொரு தீர்மானத்துக்கும் தான் முழு ஆதரவையும் அளிப்பேன் என்று கருத்துத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது குறித்து சற்று தாமதமாகவே கருத்து வெளியிட்டுள்ள நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சு அமெரிக்காவை அமைதி காக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் இவ்விடயம் தொடர்பில் அனைத்துத் தரப்பும் பேச்சுவார்த்தை மேடைக்கு வர வேண்டும் என்று தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் இன்று ஞாயிறு மாலை சீனாவில் சந்திக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த வாரம் ஜப்பான் வான் பரப்பின் மீது செல்லும் விதத்தில் வடகொரியா ஏவுகணைப் பரிசோதனை செய்ததற்கு கருத்துத் தெரிவிக்கும் விதமாக டுவிட்டரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பேச்சுவார்த்தை இதற்கு தீர்வாகாது என்று டுவீட் செய்திருந்ததும் நினைவில் கொள்ளத் தக்கது.

வடகொரியாவில் இயங்கும் அந்தஸ்து பெற்றிராத சர்வதேச அணுசக்தி நிறுவனமும் வடகொரியாவின் இந்த அணுகுண்டு பரிசோதனையை வன்மையாகக் கண்டித்துள்ளது. சற்று முன் வெளியான தகவல்களில் வடகொரியா அமெரிக்காவுக்கு மிக ஆபத்தாகவும் சர்வதேசத்துக்கு அச்சுறுத்தலாகவும் செயற்படுவதாக அதிபர் டிரம்ப் அறிக்கை வெளியிட்டதாகவும் சர்வதேச சமூகம் வடகொரியாவை முழுமையாகத் தனிமைப் படுத்தும் விதத்தில் ஐ.நா சபை தனது தடை உத்தரவுகளை அதிகப் படுத்த அழுத்தம் தெரிவித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Most Read