உலகம்
Typography

2011 ஆம் ஆண்டு சுனாமியால் மோசமாகத் தாக்கப் பட்ட ஜப்பானின் ஃபுக்குஷிமா அணு உலைப் பகுதிக்கு அண்மையில் 2 ஆம் உலக யுத்தத்தின் போது அமெரிக்காவால் போடப்பட்டு வெடிக்காது இருந்த வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

ஃபுக்குஷிமா அணு உலைப் பகுதிக்கு அண்மையில் உள்ள பூங்கா ஒன்றில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போதே 85 cm நீளமான இந்த வெடிகுண்டு கண்டு பிடிக்கப் பட்டதாக TEPCO அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வெடிகுண்டு கண்டு பிடிக்கப் பட்ட பின் உடனடியாகப் போலிசார் வரவழைக்கப் பட்டு ஃபுக்குஷிமா ரியாக்டர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 1 Km தூரம் வரை பாதுகாப்பு  வலயமாகப் பிரகடனப் படுத்தப் பட்டது. இந்த வெடிகுண்டு காரணமாக ஃபுக்குஷிமா அணு உலையின் ரியாக்டர்களில் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்தும் செயற்பாடு பாதிக்கப் படவில்லை என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. 1945 ஆம் ஆண்டு 2 ஆம் உலகப் போர் முடிவடைந்து 70 ஆண்டுகள் ஆன போதும் ஜப்பானின் ஒக்கினாவா போன்ற பகுதிகளில் இன்றும் அந்த யுத்த சமயத்தில் போட்ப்பட்டு வெடிக்காத குண்டுகள் அகழ்ந்தெடுக்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஃபுக்குஷிமாவுக்கு அண்மையில் 2 ஆம் உலகப் போர் சமயத்தில் ஜப்பானின் இராணுவ விமான நிலையம் ஒன்று செயற்பட்டு வந்ததாகவும் அது அமெரிக்காவின் இலக்காக இருந்து வந்ததாகவும் கூட செய்திகள் தெரிவிக்கின்றன.

Most Read