உலகம்
Typography

வெனிசுலாவில் அரச சார்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி அந்நாட்டு எதிரணித் தலைவர் லியோபோல்டோ லோபெஷும் முன்னால் அரசியல்வாதியான அந்தோனியோவும் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

முன்னதாக வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருந்த இவர்கள் இருவரும் மீடியாவுக்கு சர்ச்சைக்குரிய அரசியல் கூற்றுக்களைத் தெரிவித்ததன் மூலம் சட்டத்தினை மீறி இருப்பதாகவும் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்ததாகவும் இருவர் மீதும் குற்றம் சுமத்தப் பட்டு கைது செய்யப் பட்டுள்ளனர்.

வெனிசுலாவில் ஞாயிற்றுக்கிழமை தேர்தலை ஜனநாயகத்துக்கு முரணாக நடப்பதாக எதிரணி புறக்கணித்து இருந்தது. இதை அடுத்து அங்கு அரசியல் பதற்றம் நிலவும் நேரத்தில் அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடுறோவை விமர்சிக்கும் முக்கிய இரு எதிரணித்  தலைவர்களான லோபெஷ் மற்றும்  அந்தோனியோ ஆகியோர் செவ்வாய்க்கிழமை கைதாகி உள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் இடதுசாரிக் கட்சியை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்ததாகவும் நோக்கப் படுகின்றது. இந்நிலையில் அதிபர் மடுறோவை ஒரு சர்வாதிகாரி என்று விமர்சித்துள்ள அமெரிக்கா திங்கட்கிழமை வெனிசுலாவின் மடுறோ அரசு மீது பொருளாதாரத் தடை விதித்தும் நடவடிக்கை எடுத்திருந்தது.

வெனிசுலாவில் அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் வெடித்துள்ள போராட்டம் காரணமாக குறைந்தது 120 பொது மக்கள் கடந்த 4 மாதங்களில் கொல்லப் பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை வாக்களிப்பில் மாத்திரம் ஆங்காங்கே வெடித்த வன்முறையில் குறைந்தது 10 பேர் கொல்லப் பட்டுள்ளனர். இந்த வன்முறைகளை வன்மையாகக் கண்டித்துள்ள அமெரிக்கா லோபெஷ் மற்றும் லெடெஷ்மா உட்பட வெனிசுலாவில் சட்டத்துக்கு முரணாக சிறையில் அடைக்கப் பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப் பட வேண்டும் என அழுத்தமும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சட்டத்துக்கு விரோதமாக தான் மறுபடி சிறையில் அடைக்கப் படுவேன் என்றும் வெனிசுலாவில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத ஆட்சி தொடர்கின்றது என்றும் லோபெஷ் வெளியிட்ட வீடியோ பதிவு ஒன்று வெளியாகி உள்ளது.

Most Read