உலகம்
Typography

 

தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கின்றது என்ற குற்றச்சாட்டின் பேரில் கத்தார் நாட்டின் மீது தூதரக உறவை முறித்துக் கொண்ட சவுதி அரேபியாவின் மண்ணில் நாம் தாக்குதல் தொடுப்போம் என ISIS தீவிரவாதிகள் வெளிப்படையாக அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இது தொடர்பாகக் கடந்த வெள்ளிக்கிழமை ISIS தீவிரவாதிகள் வெளியிட்ட வீடியோ பதிவில் முகமூடி அணிந்து பேசும் 5 தீவிரவாதிகள், 'ஈரானைத் தொடர்ந்து தற்போது உங்களுக்கான முறை தான். உங்கள் சொந்த இடத்திலேயே வந்து தாக்குவோம்!' என மிரட்டல் விட்டுள்ளனர்.

இந்த வீடியோ வெளியீட்டால் அதிகரித்துள்ள பதற்றத்தைத் தவிர்க்க சவுதி உட்பட முக்கிய வளைகுடா நாடுகளில் பொது மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளதுடன் சவுதி அரசு இந்த மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளது. இந்நிலையில் அண்மையில் ஈரானின் டெஹ்ரானில் 17 பேரைப் பலி கொண்ட ISIS தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்டவன் என்று கருதப் படும் நபரைத் தாம் கொன்று விட்டதாகவும் இத்தாக்குதலுடன் தொடர்புடைய இன்னும் சிலர் கைது செய்யப் பட்டும் பாதுகாப்புப் பலப் படுத்தப் பட்டும் உள்ளதாகவும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

இதேவேளை பிலிப்பைன்ஸின் மாராவி நகரை மீட்க ISIS போராளிகளுடன் தொடர்புடைய அபு சய்யாஃப் தீவிரவாதிகளுடன் அந்நாட்டு இராணுவம் நடத்தி வரும் உச்சக் கட்ட போரில் 13 இராணுவ வீரர்கள் மேலதிகமாகப் பலியாகி உள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. அண்மைக் காலமாக பிலிப்பைன்ஸுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கடத்திச் சென்று இத்தீவிரவாதிகள் பாரிய பிணைத் தொகையைப் பெற்ற பின் அவர்களை விடுவிப்பதும் பிணைத் தொகை கிடைக்காத பட்சத்தில் கடத்தப் பட்டவர்களின் தலைகளைத் துண்டித்தும் அராஜகம் செய்து வருகின்றது.

இந்நிலையில் தலைநகர் மனிலாவில் இருந்து 800 Km தொலைவில் உள்ள மிண்டானோ தீவுக் கூட்டத்தில் 2 இலட்சத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் வசித்து வரும் மாராவி இனைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வரும் தீவிரவாதிகளை சுற்றி வளைத்து பிலிப்பைன்ஸ் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றது. கடந்த இரு நாட்களில் மட்டும் இத்தாக்குதலில் 13 இராணுவத்தினர் பலியானதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Most Read