உலகம்
Typography

பிரிட்டனில் பாராளுமன்றத் தேர்தல் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்றது. அதில் ஆளும் கட்சிக்குத் தேவையான 326 ஆசனங்கள் கிடைக்காத காரணத்தால் வெறும் 318 இடங்களுடன் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது. எனவே பிரதமர் தெரேசா மே தலைமையில் கன்சர்வேட்டிவ் கட்சி கூட்டணி அரசு அமைக்க வேண்டிய நிலமைக்குத் தள்ளப் பட்டுள்ளது.

இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கான ஆயுட் காலம் இன்னும் 3 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாகவே தெரேசா மே தேர்தலை அறிவித்ததால் தான் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போயுள்ளது. இந்நிலையில் சிறுபான்மைக் கட்சிகளுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்க பிரதமர் தெரேசா மே மேற்கொண்ட முடிவுக்கு ஆளும் கட்சியிலேயே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளதுடன் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே தேர்தலை நடத்திக் கட்சிக்குப் பின்னடவை ஏற்படுத்தித் தந்த அவர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த உறுப்பினர்களது நெருக்கடி காரணமாக தெரேசா மேயின் அரசியல் ஆலோசகர்கள் நிக் நிமோதி, பயோனா ஹில் ஆகியவர்கள் ஏற்கனவே பதவி விலகி உள்ளதாகத் தெரிய வருகின்றது. தெரேசா மே இற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவு உள்ள போதும் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தையை விரைவு படுத்த வேண்டும் என ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மேர்கலின் அழுத்தமும் இன்னொரு புறம் இருந்து வருகின்றது.

இதேவேளை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பிரிட்டன் ராணி  எலிசபெத் இனை சந்தித்துப் பேசிய தெரேசா மேய் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்கப் போவதாகவும் உறுதி படத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Most Read