உலகம்
Typography

ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் சிக்காக்கோவில் நடத்திய தனது இறுதி உரையில் கண்ணீருடன் விடைபெற்றுள்ளார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.

அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்ற பெருமையுடன் சுமார் 8 வருடங்கள் ஆட்சி புரிந்த ஒபாமாவின் பதவிக் காலம் ஜனவரி 20 உடன் முடிவடைவதால் செவ்வாய்க்கிழமை சிக்காக்கோவில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் தனது இறுதி உரையை அவர் நிகழ்த்தியிருந்தார்.

தனது உரையின் போது ஆம் நம்மால் முடியும் என்றும் நாம் செய்து காட்டியிருக்கின்றோம் எனவும் குறிப்பிட்ட ஒபாமா 8 வருடங்களாக தனது ஆட்சிக்கு உறுதுணை புரிந்த மக்களுக்கு நன்றியும் தெரிவித்தார். மேலும் தேர்தலுக்காக மட்டுமல்ல, வாழ்நாள் முழுதும் ஜனநாயகத்துக்காக அமெரிக்க மக்கள் தேவைப் படுவதாக தெரிவித்த ஒபாமா தனக்குத் துணையாக நின்ற தன் மனைவி மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணி மிச்சேல் ஒபாமாவுக்கும் நன்றி தெரிவித்ததுடன் ஒரு தந்தையாக தனது மகள்களான மாலியா மற்றும் சாஷா ஆகியோர் குறித்து பெருமிதம் அடைவதாகத் தெரிவிக்கவும் தவறவில்லை.

மேலும் நாம் ஒற்றுமையுடன் தளர்ந்து போகாது இருக்கும் வரை ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் நம்மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என்றும் நாம் அனைவரும் பெண் அடிமைத்தனம், நிறவெறி, பாலியல் பாகுபாடு, மதவெறி ஆகியவற்றைக் கைவிடுவதும் மிகவும் அவசியம் எனவும் ஒபாமா தெரிவித்தார்.

முக்கியமாக அமெரிக்க மண்ணில் கடந்த 8 வருடங்களாகத் தீவிரவாதத் தாக்குதல் எதுவும் இடம்பெறவில்லை என்றும் ISIS இயக்கம் விரைவில் அழிக்கப் படும் எனவும் ஒபாமா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் எமது வருங்கால குழந்தைகள் தலை மீது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை சுமத்தாது இப்போதே நாம் விரைந்து செயற்பட வேண்டும் எனவும் ஒபாமா குறிப்பிட்டார்.

இறுதியாத் தன்னை சிறந்த அதிபராகவும் சிறந்த மனிதராகவும் நீங்களே அதாவது அமெரிக்க மக்களே உருவாக்கினீர்கள் என்று கூறி ஒபாமா கண்ணீருடன் விடைபெற்றது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது குறிப்பிடத்தக்கது. ஒபாமாவின் சொந்த நகரமான சிக்காக்கோவில் அவர் நிகழ்த்திய உரையைக் கேட்க அவரின் ஆதரவாளர்கள் சுமார் 20 000 பேர் நேரில் கலந்து கொண்டிருந்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்