ICBM எனப்படும் கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய அதிதிறன் வாய்ந்த ஏவுகணைப் பரிசோதனையை அதிபர் கிம் ஜொங் உன் உத்தரவின் கீழ் எந்த இடத்தில் இருந்தும் எப்போது வேண்டுமானாலும் நிகழ்த்துவோம் என ஞாயிற்றுக் கிழமை வடகொரியா சூளுரைத்துள்ளது.
மேலும் அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் ஆயுதக் கொள்கைகள் தான் தமது நாட்டில் ஆயுத வல்லமையை அதிகரிக்க வழிகோலியுள்ளது என்றும் வடகொரியா தெரிவித்துள்ளது. மறுபுறம் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ஆஷ் கார்ட்டெர் தெரிவித்த செய்தியில் வடகொரியாவின் அணுவாயுத ஏவுகணைப் பரிசோதனைகள் அமெரிக்காவுக்கு மோசமான அச்சுறுத்தல் என்றும் இதனால் அதன் ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அழிக்கக் கூடிய தொழிநுட்பத்துக்கு அமெரிக்கா தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வடகொரியாவின் குறித்த ஏவுகணைகள் அமெரிக்காவை நோக்கியோ அல்லது அதன் நட்பு நாடுகளை நோக்கியோ வரும் போது மாத்திரமே அவை சுட்டு வீழ்த்தப் படும் எனவும் ஆஷ் கார்ட்டெர் குறிப்பிட்டார். கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளின் வீச்சு பொதுவாக 5500 km இற்கு உட்பட்டதாகவே இருக்கும். ஆனால் 10 000 km தாண்டி செல்லக் கூடிய ICBM ஏவுகணைகளையும் தயாரிக்க முடியும். அமெரிக்கா வடகொரியாவிடம் இருந்து குறைந்தபட்சம்
9000 km தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.