உலகம்
Typography

தெற்கு தாய்லாந்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்குக்கு 18 பேர் பலியாகி இருப்பதாகவும் 7 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் தமது வதிவிடங்களை இழந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

கடந்த ஒரு வாரமாகப் பெய்து வரும் கனமழையால் ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

வீதிகளிலும் விவசாய நிலங்களிலும் வெள்ளப் பெருக்கு சூழ்ந்துள்ளது. 1500 பாடசாலைகள் சேதம் அடைந்துள்ளன. அதிகளவில் பாதிக்கப் பட்டுள்ள நகோன் ஷி தம்மராட் மாகாணத்தில் இராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் வீடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கப் பட்டு வருகின்றன. மேலும் மீட்பு நடவடிக்கை துரிதமாக முடுக்கி விடப் பட்டிருப்பதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. கனமழை இன்று ஞாயிற்றுக் கிழமையும் நாளையும் இன்னும் அதிகளவில் இருக்கும் என தாய்லாந்து வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

பல இடங்களில் சாலைகளும் ரயில் பாதைகளும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப் பட்டிருப்பதால் கிட்டத்தட்ட 8 மாகாணங்களில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளதுடன் இன்னும் சில தினங்களுக்கு நிலைமை இன்னமும் மோசமாகும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. நகோன் சி தம்மராத் மாகாணத்தின் தலைநகரில் உள்ள விமான நிலையம் வெள்ளப் பெருக்கால் மூடப்பட்டுள்ளது. தாய்லாந்தில் வழக்கத்துக்கு மாறாக 2016 ஆம் ஆண்டு இறுதியிலும் 2017 ஜனவரியிலும் கனமழை பெய்துள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Most Read