உலகம்
Typography

வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்திலுள்ள ஃபோர்ட் லாடர்டல் விமான நிலையத்தில் பக்கேஜ் பொதிகளை சேகரிக்கும் இடத்தில் முன்னால் இராணுவ வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5  பேர் கொல்லப் பட்டதுடன் 8 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.

விரைந்து தொழிற்பட்ட விமான நிலைய போலிசார் தாக்குதல் நடத்திய ஈராக் போரில் பங்கேற்ற முன்னால் இராணுவ வீரரான 26 வயதாகும் எஸ்டேபின் சாண்டியாகோவைக் கைது செய்தனர்.

பின்னதாக குறித்த தாக்குதல் தாரி மனநலம் பாதிக்கப் பட்டவர் என்றும் அதற்காக சிகிச்சை பெற்று வந்தவர் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. சம்பவத்தில் நேரில் பார்த்த பலரின் கூற்றுப் படி திடீரென குறித்த நபர் எந்தவித காரணமும் இன்றி பொது மக்களை நோக்கித் துப்பாக்கியால் சுட ஆரம்பித்ததாகவும் இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றதுடன் பலர் நாற்காலிகளுக்கு அடியே ஒழிந்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்குப் பின்னால் தீவிரவாதம் இருக்க வாய்ப்பில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அலாஸ்காவில் இருந்து ஃபுளோரிடா விமான நிலையத்துக்கு வந்திருந்த சாண்டியாகோ விமான நிலைய கழிவறையில் தான் மறைத்து வைத்துக் கொண்டு வந்த துப்பாக்கியை ரீ லோட் செய்த பின் பக்கேஜ் பகுதியில் இருந்த பயணிகள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான். இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியதாகக் கூறப்படுகின்றது. தனது துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்த பின் அவன் தானாகவே போலிசாரிடம் சரணடைந்ததாகக் கூறப்படுகின்றது. எதிர்வரும் திங்கட்கிழமை கைது செய்யப் பட்டுள்ள சாண்டியாகோ நீதிமன்றத்தில் நிறுத்தப் படுவார் எனத் தெரிய வருகின்றது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை அடுத்து 16 மணித்தியாலயங்கள் தற்காலிகமாக மூடப் பட்ட ஃபோர்ட் லாடர்டல் விமான நிலையம் தற்போது திறக்கப் பட்டிருப்பதாகவும் சேவைகள் வழமைக்குத் திரும்பி இருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் பல மணி நேரங்கள் மூடப் பட்டதால் தேங்கிய சுமார் 20 000 லக்கேஜ் பொதிகளை மீள வந்து பெற்றுக் கொள்ளுமாறு விமான நிலையம் பொது மக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது.

குறித்த தாக்குதலில் கொல்லப்  பட்டவர்களது குடும்பத்தினருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவும் புதிய அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்பும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் TSA எனப்படும் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் கடும் சட்ட திட்டங்களுக்கு மத்தியில் துப்பாக்கிகளை விமானத்தில் கொண்டு செல்வது சட்டபூர்வமானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் அமெரிக்காவின் துப்பாக்கிச் சட்டங்களின் நெகிழ் தன்மையால் மனநலம் பாதிக்கப் பட்டோர், ஜிஹாதி குழுக்களால் ஈர்க்கப் பட்டோர் மற்றும் தனிப்பட்ட விரோதம் போன்ற காரணங்களால் அங்கு பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறுவதுடன் இதில் அப்பாவி மக்கள் கொல்லப் பட்டும் வருகின்றனர்.

கடந்த வருடம் ஃபுளோரிடாவின் ஒர்லாண்டோவிலுள்ள ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் ISIS இயக்கத்தால் ஈர்க்கப் பட்ட அமெரிக்க மனிதர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப் பட்டிருந்தனர். இச்சம்பவம் நவீன அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான தனிநபர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமாகப் பதிவு செய்யப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Most Read