உலகம்
Typography

மறைந்த கியூபாவின் புரட்சித் தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோவின் இறுதி ஊர்வலம் நேற்று புதன் கிழமை தலைநகர் ஹவானாவில் ஆரம்பித்து தொடர்ந்து 4 நாட்களாக இடம்பெற்று இறுதியில் கிழக்கு நகரான சாண்டியாகோவில் அவரின் சடலம் நல்லடக்கம் செய்யப் படவுள்ளது.  நேற்றைய ஊர்வலத்திலேயே பெருந் திரளான மக்கள் ஆயிரக் கணக்கில் பங்கேற்றுக் கொண்டனர்.

கிட்டத்தட்ட 50 வருடம் கியூபாவை ஆட்சி செய்த புரட்சித் தலைவரான 90 வயதாகும் ஃபிடெல் காஸ்ட்ரோ இன் சடலம் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமையுடன் 9 நாட்களாக பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப் பட்டு ஈற்றில் நல்லடக்கம் செய்யப் படுகின்றது. இவரது இறுதி ஊர்வலம் சுமார் 800 km தூரம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. 1959 இல் கியூபாவின் வல்லமை வாய்ந்த தலைவரான ஃபுல்ஜெனிக்கோ பட்டிஸ்டாவை பதவி நீக்கம் செய்தது முதல் பல தசாப்தங்களாக மக்களின் அபிமானம் பெற்ற தலைவராக காஸ்ட்ரோ விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்றைய தினமே ஹவானா வீதிகளில் இறுதி ஊர்வலத்தைக் காண்பதற்காகத் திரண்ட  சில மக்கள் இரவுப் பொழுதையும் வீதி ஓரங்களில் தூங்கியவாறு கழித்து பின்னர் இன்றைய தினம் பெரும் ஆவலுடன் ஊர்வலத்தில் பங்கேற்றுக் கொண்டனர். கடந்த வெள்ளி இரவு காலமான ஃபிடெல் காஸ்ட்ரோவை நினைவு கூறுவதற்காக செவ்வாய் இரவு பெரும் பேரணி ஒன்று ஹவானா புரட்சி சதுக்கத்தில் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. இதில் பங்கேற்ற கியூபா, மெக்ஸிக்கோ, எக்குவடோர், பொலிவியா, வெனெசுலா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் தலைவர்கள் காஸ்ட்ரோவை நினைவு கூர்ந்து உரை நிகழ்த்தி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்