உலகம்
Typography

அண்மைக் காலமாக ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி வரும் தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹே தான் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

முக்கியமாக அதிபர் பார்க் கியுன் ஹே இன் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரச விவகாரங்களில் அதிகம் தலையிட்டு அரசின் முக்கிய ரகசிய கோப்புக்களைக் கூட பார்வையிட்டு வருவதாகவும் அதிபருடன் அவருக்கு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி பல நிறுவனங்களின் நன்கொடைகளைப் பெற்று வருவதாகவும் தம்மிடம் ஆதாரங்கள் உள்ளன என எதிர்க் கட்சிகள் குற்றம் சுமத்தி இருந்தன.

இக்குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அண்மையில் கைது செய்யப் பட்ட சோய் சூன் சில் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. மேலும் சோய் சூன் சில் உடன் தொடர்புடைய பிரபல 'சாம்சங்' எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள் சிலவற்றிலும் தென்கொரிய அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் பார்க் கியுன் ஹே மீதான மக்களின் கருத்துக் கணிப்பு புள்ளி விபரத்திலும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பர்கள் தொகை 93% வீதமாக உயர்ந்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் பார்க் கியுன் ஹே உடனே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது அதிபர் மாளிகையை நோக்கி 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் சியோலில் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தி இருந்தனர். இதைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹே தொலைக்காட்சியில் பொது மக்களுக்கு ஆற்றிய உரையில், நாட்டில் இப்போது நிலவும் இறுக்கமான சூழ்நிலையைப் போக்க சட்டரீதியாக பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கலந்து பேசி ஒருமித்து எடுக்கும் முடிவுக்குத் தான் கட்டுப் படுவேன் எனவும் இவர்களது முடிவின் படி நான் பதவி துறக்க வேண்டுமெனில் அதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் அதிகாரத்தை பாராளுமன்றம் சுட்டிக் காட்டும் நபரிடம் கையளிக்கவும் தான் தயார் எனவும் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Most Read