உலகம்
Typography

ஜூலை மாதம் துருக்கியில் முறியடிக்கப் பட்ட ஆட்சிக் கவிழ்ப்பை தலைமை தாங்கியதாகக் கருதப் படும் அமெரிக்காவில் வசிக்கும் ஃபெதுல்லா குலென் என்ற மதகுருவுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிடுகின்றார்கள் என்றும் தீவிரவாத குழுக்கள் சிலவற்றுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டில் கிட்டத்தட்ட 15 ஊடகங்களை துருக்கி அரசு இழுத்து மூடியுள்ளதுடன் மேலதிகமாக 10 000 பொது மக்கள் சேவையாளர்களைப் பதவி நீக்கம் செய்தும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குலெனுக்கு ஆதரவு உடையவர்கள் அனைவரது தொடர்பையும்  வேரறுக்க வேண்டியது அவசியம் என்று கூறும் துருக்கி அரசு ஏற்கனவே 100  000 இற்கும் அதிகமான மக்களைப் பதவி நீக்கித் தண்டித்தும்  37 000 பேர் வரை கைது செய்தும் உள்ளது. சனிக்கிழமை மாலை வெளியான அதிகாரப்பூர்வமான கஷெட்டே என்ற பத்திரிகையில் மேலும் ஆயிரக் கணக்கான, கல்வியியலாளர்கள், ஆசிரியர்கள், சுகாதார ஊழியர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களையும் துருக்கி அரசு பதவி நீக்கி இருப்பதாகத் தெரிய வருகின்றது. இந்நிலையில் துருக்கி அரசும் அதிபர் எர்டோகனும் தற்போது எடுத்து வரும் இந்த மோசமான நடவடிக்கைகளே ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்கும் புறம்பான உண்மையான நேரடி ஆட்சிக் கவிழ்ப்பு என முக்கிய எதிர்க்கட்சியான CHP இன் எம்பி செஷ்கின் டன்ரிக்குலு டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

ஜூலை முதற்கொண்டு துருக்கியில் அவசர கால சட்ட அடிப்படையிலான ஆட்சியின் கீழ் முக்கியமாக தென்கிழக்கு குர்துப் பகுதிகளில் தடை செய்யப் பட்டுள்ள பத்திரிகைகள், செய்தி இணைப்புக்கள், மாத இதழ்கள் உட்பட ஏனைய மீடியா ஊடகங்களின் எண்ணிக்கை 160 என்பது குறிப்பிடத்தக்கது. இதை விட துருக்கி பல்கலைக் கழகங்கள் சொந்தமாக தமது முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் பறிக்கப் பட்டு YOK எனப்படும் உயர்தர கல்வி அமைப்பினால் மும்மொழியப் படும் முதல்வர்களையே அதிபர் எர்டோகன் நேரடியாக நியமிப்பார் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. இச்செய்கையும் துருக்கி அதிபர் டாய்யிப்  எர்டோகனின் எதிரணியினரை மிகவும் ஆத்திரமடையச் செய்துள்ளது.

தற்போது அமெரிக்காவில் தஞ்சமைடைந்துள்ள குலெனை நாடுகடத்தித் தம்மிடம் அனுப்புமாறு அமெரிக்காவிடம் துருக்கி வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read