உலகம்
Typography

திங்கட்கிழமை திபேத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா செக் குடியரசின் தலைநகர் ப்ராகுவே இற்கு விஜயம் செய்திருந்தார்.  இதைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க் கிழமை தலாய் லாமாக்கு அழைப்பு விடுத்ததன் விளைவாக சீன அரசுக்கு ஏற்படக் கூடிய கோபத்தைத் தணிப்பதற்கென செக் குடியரசு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே பல பில்லியன் யூரோக்கள் பெறுமதியான முதலீட்டை செக் குடியரசில் சீனா இடுவதற்கு இணங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செக் குடியரசின் அதிபர் மற்றும் பிரதமர் இணைந்து வெளியிட்ட இந்த அறிக்கையில் தாம் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய நலன்களை மதிப்பதாகவும் எமது இரு தரப்புக்கும் இடையிலான உறவானது பல நண்மைகளை அளிக்கக் கூடியது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2013 முதல் ஆட்சியில் இருக்கும் கம்யூனிசத்தை சாராத செக் அதிபரான மிலோஸ் சேமான் சீனாவுடனும் ரஷ்யாவுடனும் நெருங்கிய நட்பை ஏற்படுத்தி வந்துள்ளார். 1951 முதல் திபேத்தை ஆக்கிரமித்திருக்கும் சீனா நாடு கடந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள திபேத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா அங்கு வன்முறையையும் பிரிவினையையும் ஏற்படுத்தி வருவதாக நீண்ட காலமாக குற்றம் சுமத்தி வருகின்றது.

இந்நிலையில் தலாய்லாமா செக் குடியரசில் நடைபெறும் ஜனநாயக சார்பு மாநாடு 2000 இல் கலந்து கொள்வதற்காகவே முக்கியமாக அங்கு சென்றிருந்தார். மேலும் ப்ராகுவேக்கு வர முன்பு சுலோவாக்கியா சென்ற தலாய்லாமா அந்நாட்டு அதிபர் அண்ட்றெட்ஜ் கிஸ்காவைச் சந்தித்திருந்தார். இந்நிகழ்வு பீஜிங் நிர்வாகத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாகவும் இதனால் சுலோவாக்கியா அரசை அது கடிந்து கொண்டதாகவும் கூடக் கூறப்படுகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்