உலகம்
Typography

ஈராக்கின் 2 ஆவது மிகப் பெரிய நகரான மோசூலை ISIS இடமிருந்து மீட்கும் தாக்குதல் அந்நாட்டு இராணுவம் மற்றும் குர்து பேஷ்மெர்கா படையினர் தலைமையில் 2 ஆவது நாளாகத் தீவிரம் அடைந்துள்ளது.

இப்படைகளுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான மேற்குலக கூட்டணி நாடுகள் வான் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ISIS போராளிகள் இந்நகரைக் கைப்பற்றிய போது அது உலகம் முழுதும் பாரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது. ISIS போராளிகளிடம் விழ முன்பு இந்நகர் நினெவெஹ் மாகாணத்தின் எண்ணெய் வளம் மிக்க தலைநகராகவும், வடமேற்கு ஈராக்கின் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார மத்திய இடமாகவும் திகழ்ந்து வந்தது. சுமார் 1.8 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இந்நகரம் ஈராக்கின் பூர்விக அரபுக்கள், குர்துக்கள், அஸ்ஸிரியன்கள் மற்றும் துர்க்மென்கள் மட்டுமன்றி பல சிறுபான்மை மதத்தவர்களும் வாழும் நகரமாகும். இன்றைய திகதியில் இடம்பெயர்ந்த மக்களைத் தவிர்த்து சுமார் 1 மில்லியன் மக்கள் வரை இன்னமும் இந்நகரில் கடும் யுத்த சூழலை அனுசரித்து மிக அவலமான நிலையில் வசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை சிரியாவின் அலெப்போ நகர் மீது அதிபர் அசாத் சார்பான இராணுவத்துடன் இணைந்து ரஷ்யா மேற்கொண்டு வரும் வான் தாக்குதல் வியாழக்கிழமை காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணி
வரை மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்தப் படும் எனவும் இதன் மூலம் பொது மக்களும், போராளிகளும் பாதுகாப்பாக நகரை விட்டு வெளியேற முடியும் எனவும் மாஸ்கோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை  காலை  10 மணிக்கும் அலெப்போ மீதான வான் தாக்குதல் சில மணித்தியாலங்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தப் பட்டது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் அலெப்போ மீது அதிபர் அசாத்தின் படைகளோ அல்லது ரஷ்யாவோ தொடுக்கும் வான் தாக்குதல் ஓர் போர் குற்ற நடவடிக்கையாகவே கருதப் படும் என ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்  சிரிய அரசு இந்த வான் தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ளும் பட்சத்தில் அதன் மீதான பொருளாதாரத் தடை மேலும் அதிகரிக்கப் படும் எனவும் திங்கட்கிழமை லக்ஸம்பர்க்கில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்