உலகம்
Typography

கடந்த வருட இறுதியில் அவுஸ்திரேலியாவைத் துவம்சம் செய்த காட்டுத் தீயை அடுத்துத் தற்போது அங்கு பல பகுதிகளில் 22 ஆண்டுகளில் இல்லாதளவு பேய் மழை பெய்து வருகின்றது.

ஏற்கனவே காட்டுத்தீயில் தென்கிழக்கு அவுஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் ஆயிரக் கணக்கான வீடுகளும், பல கோடி ஏக்கர் காடுகளும் அழிந்து கோடிக் கணக்கான உயிரினங்களும் அழிந்து மடிந்தன.

தற்போது அவுஸ்திரேலியக் கடலில் உருவாகியுள்ல டேமியன் புயலால், நியூசவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் 22 ஆண்டுகளில் இல்லாத கனமழை கொட்டியுள்ளது. இன்னும் சில நாட்களுக்கும் இந்தக் கனமழை தொடரும் என அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், இவ்விரு மாகாணங்களிலும், பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுவதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப் பட்டும், தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்டும் உள்ளது. ஆயிரக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதேவேளை சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் சுமார் 113 விலங்கினங்கள் 30% வீதத்துக்கும் அதிகமான தமது இருப்பிடங்களை இழந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக கோடிக் கணக்கான விலங்குகள் தீயில் மாண்டு விட்டாலும் எந்தவொரு இனமும் முற்றிலும் அழியவில்லை எனப்படுகின்றது. ஆயினும் வதிவிடங்களை இழந்த உயிரினங்களுக்கு அடைக்கலம் கொடுக்காது விட்டால் எஞ்சியிருக்கும் உயிரினங்களும் அழிவடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என அவுஸ்திரேலிய அரசு கவலை தெரிவித்துள்ளது.

இதேவேளை போட்ஸ்வானா என்ற ஆப்பிரிக்க நாட்டில் விளை நிலங்களைப் பாழடித்து மனிதர்களையும் தாக்கும் அளவுக்கு யானைகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் சுமார் 70 யானைகளை வேட்டையாட அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக யானைகளை வேட்டையாட விதிக்கப் பட்டிருந்த தடையை நீக்கி அந்நாட்டு அதிபர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்