உலகம்
Typography

சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் திங்கள் இரவு முதல் செவ்வாய் இரவு வரை வரலாற்றில் மிகக் கடுமையான மின்னல் இடியுடன் கூடிய மோசமான காலநிலை நிலவியுள்ளது.

இதனால் நாட்டின் பல பகுதிகளில் விமானப் போக்குவரத்துக்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. மேலும் மரங்கள் சாலைகளிலும், தண்டவாளங்களிலும் முறிந்து விழுந்து கணிசமான பகுதிகளில் ரயில் போக்குவரத்தும் A1 மற்றும் A2 மோட்டார் பாதைகளில் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப் பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ரயில் சேவையான SBB இன் அறிவிப்பின் படி கோர்ட் மற்றும் பேர்னின் மௌட்டீர் மேலும் ஐரோலோ, ஏர்ஸ்ட்ஃபெல்ட் இடையேயான கொதார்ட்டு ரயில்வே போக்குவரத்துக்கள் தடைப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இது தவிர பல மலைப் பகுதிகளுக்கான ரயில்வே சேவைகளில் தடையும், தாமதமும் ஏற்பட்டுள்ளது. இந்தப் போக்குவரத்துக்களில் பெரும்பான்மை செவ்வாய் மாலைக்குள் சரி செய்யப் பட்டு விட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

36 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் புயலில் சிக்கி உயிரிழந்ததாகவும், மேலும் 3 பேர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. பல பகுதிகளில் பாடசாலைகள் மூடப் பட்டும் இருந்தன. பாசெல் பகுதியூடான 180 விமானப் பயணங்களும், ஜெனீவா பகுதியூடான 30 விமானப் பயணங்களும் ரத்து செய்யப் பட்டதாகவும் சுவிட்சர்லாந்து ஊடகங்கள் அறிவித்துள்ளன.

சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் வேகமான காற்று இன்னமும் வீசி வருவதால் பொது மக்கள் வனப் பகுதிகளின் ஊடான பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அதிகாரிகள் இன்னும் எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுவிட்சர்லாந்து காலநிலைப் பதிவேட்டில் 2019 முதல் 2020 வரையிலான குளிர் காலமே மிகவும் வெப்பநிலை கூடிய குளிர் காலம் என்பதுடன் சுவிஸின் சூரிச் உட்பட சில பகுதிகளில் இன்னமும் பனி கொட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்