உலகம்
Typography

உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரும், பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெப் பெசோஸ் 3 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளதுடன் 'மேக் இன் இந்தியா' பொருட்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய கிட்டத்தட்ட 7000 கோடி ரூபாய் முதலீடு செய்வதாகவும் அறிவித்துள்ளார்.

டெல்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்குச் சென்று மலர் தூவி மரியாதை செய்த பின்பு ஒழுங்கு செய்யப் பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் 2025 ஆமாண்டுக்குள் இந்தியாவில் தயாரிக்கப் பட்ட 10 பில்லியன் டாலர்கள் பெறுமதியான பொருட்களை ஆன்லைன் வர்த்தகம் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படும் என்றும் அவர் தெரிவித்தார். அமேசான் மின்னணு வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளில் மிக முக்கிய நாடாகக் கருதப்படும் இந்தியாவில் மேலும் 5.5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யவிருப்பதாகவும் அமேசன் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இந்தியாவின் அமேசான் இணையத் தளம் தற்போது 5.5 இலட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் வர்த்தகம் செய்து வருகின்றனர். ஜெப் பெசோஸ் இந்தியாவுக்கு வருவதைக் கண்டித்து நாடு முழுதும் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் கிட்டத்தட்ட 300 நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிறு மற்றும் நடுத்தர வர்த்தகம் மேற்கொள்ளும் வணிகர்களை ஆன்லைன் வர்த்தகம் பெரிதும் பாதிக்கின்றது என்பதே இப்போராட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

அமேசான் நிறுவனம் தொழிலில் மோசமான தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும், ஏற்கனவே பல்லாயிரக் கணக்கான சிறு வணிகர்களது தொழில் நசுக்கப் பட்டு விட்டது என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்