உலகம்
Typography

பாலைவன நாடான சவுதி அரேபியாவில் சில இடங்களில் கடந்த 3 நாட்களாகக் கடும் பனிப் பொழிவு பெய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகின்றன. முதலில் இந்த பனிப்பொழிவு ஒரு அசாதாரணமான நிகழ்வு என்றோ அல்லது நாடு முழுதும் பொழிகின்றது என்றோ தவறாகக் கருதி விட வேண்டாம்.

ஜோர்டானின் எல்லையை ஒட்டியுள்ள டபூக் பிராந்தியத்தின் ஜபல்-அல்-லாஸ், அல்-தாஹீர் ஜபல் அல்குவான் உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் வருடாந்தம் ஆண்டின் முதல் 3 வாரங்களில் இவ்வாறு பனிப்பொழிவு ஏற்படுவது இயல்பு என சவுதி மக்கள் கூறுகின்றார்கள். சவுதியில் பல இடங்களில் இரவில் பூச்சியம் டிகிரிக்கு கீழேயும் வெப்ப நிலை சென்று உறைபனியாக சவுதி காணப் படுவது இயல்பாகும்.

தற்போது பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் சாலைகளில் வெண்பனி நிறைந்து காணப்படுவதால் போக்குவரத்து மந்தமாகியுள்ளது. இப்பகுதிகளில் குடியிருப்பவர்கள் சூடாக தம்மை வைத்துக் கொள்ளவும், தனிமையாக இருக்க வேண்டாம் என்றும் வானிலை அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை ஜோர்டான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் பாகிஸ்தானில் பலுசிஸ்தான் பகுதி கடும் பனிப்பொழிவு மற்றும் பலத்த மழையால் மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக வீடுகள் இடிந்து விழுந்து 14 பேர் பலியாகி உள்ளனர். ஆப்கானுடன் பாகிஸ்தானை இணைக்கும் குவெட்டா - சாமன் நெடுஞ்சாலையில் நூற்றுக் கணக்கான வாகனங்களும், லாரிகளும் தேங்கியுள்ளன. போக்குவரத்துப் பாதைகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க இராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் முயன்று வருகின்றனர்.

வழமையை விட இப்பகுதிகளில் பனிப்பொழிவு இம்முறை 2 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS