உலகம்
Typography

உக்ரைன் விமானத்தை ஈரான் அரசு தவறுதலாக சுட்டு வீழ்த்தியதற்கு உலக நாடுகள் கடும் கண்டனங்களை ஈரானுக்குத் தெரிவித்து வரும் நிலையில் முன்னதாகப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அறிவித்திருந்த ஈரான் தற்போது ஈராக்கில் உள்ள பாலாட் என்ற விமானப் படைத் தளத்தின் மீது 7 முறை ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இத்தாக்குதலில் அமெரிக்கர்கள் யாரும் இறக்கவில்லை என்றும் 4 ஈராக்கிய வீரர்கள் காயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய விவகாரத்தில் ஈரானின் சொந்த நாட்டு மக்களே அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இவ்வாறான ஒரு பதற்றமான ஒரு சூழலில் ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானியினை கத்தார் இளவரசர் ஷெய்க் தமீம் பின் ஹமாத் அல் தானி சந்தித்துப் பேசியுள்ளார்.

இதன் போது அவர் அமெரிக்காவுடன் மோதல் போக்கைக் கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதே உகந்த தீர்வு என்று வலியுறுத்தியதாகத் தெரிய வருகின்றது. ஈரான் அதிபரைச் சந்தித்த பின்னர் அந்நாட்டு சர்வ அதிகாரமும் மிக்க ஆன்மிகத் தலைவர் அயதுல்லா அலி காமேனியையும் கத்தார் இளவரசர் சந்தித்துப் பேசியுள்ளார். அமெரிக்காவை எதிர்க்கும் விவகாரத்தில் மத்திய கிழக்கு நாடுகள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என ஈரான் ஆன்மிகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் முதல் ஈரானிய அமெரிக்க விண்வெளி வீரரான ஜாஸ்மின் மொக்பெலி என்ற பெண்மணி விண்வெளி ஆய்வு நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 1979 இல் ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சியின் போது ஜாஸ்மின் குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறி ஜேர்மனியில் தஞ்சமடைந்தனர். பின்பு அவர்கள் நியூயோர்க்கில் குடியேறியதை அடுத்து அங்கு தான் ஜாஸ்மின் வளர்ந்து கல்வி கற்று விண்வெளி வீரராக முன் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS