உலகம்
Typography

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டத்தைத் தூண்டி விட்டதாகக் குற்றம் சாட்டி பிரிடன் தூதரை ஈரான் அரசு கைது செய்துள்ளது.

ஏற்கனவே உக்ரைன் பயணிகள் விமானத்தைத் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதற்காக ஈரான் மீது சர்வதேசம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த நடவடிக்கைக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட சர்வதேச நாடுகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

பயணிகள் விமானத்தை ஈரான் மனிதத் தவறு காரணமாக சுட்டு வீழ்த்தப் பட்டதாக உறுதி படுத்திய பின்னர் இச்செயலுக்காக அரசின் உயர் மட்டத் தலைவரான அயத்துல்லா காமேனிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரான் நகரங்களில் இளைஞர்கள், மாணவர்கள் எனப் பல்லாயிரக் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர். இவர்களைப் போராடத் தூண்டியதாகக் குற்றம் சாட்டியே பிரிட்டன் தூதர் ராப் மெக்கரை ஈரான் இராணுவம் கைது செய்து சில மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்திருந்த பின்னர் விடுவித்துள்ளது.

ஈரானின் இச்செயலால் ஆத்திரமடைந்த பிரிட்டன் மற்றும் அமெரிக்க அரசுகள் ஈரான் உடனே இதற்கு மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. இன்னொரு புறம் விமானத்தைத் தாக்கி வீழ்த்திய ஈரானுக்குத் தண்டனை வழங்கப் பட்டு இதில் தொடர்புடைய அதிகாரிகள் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் விளாடிமீர் இச்சம்பவத்துக்கு இழப்பீடு வழங்கவும், உக்ரைனின் 45 பேர் கொண்ட நிபுணர் குழு இது தொடர்பில் முழு விசாரணை நடத்தவும் ஈரான் அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 4 அமெரிக்கத் தூதரகங்களைத் தாக்குவதற்கு காசிம் சுலைமானி சதித் திட்டம் தீட்டியதாகவும், அதனால் தான் அவரைக் கொல்ல வேண்டி உத்தரவிட்டதாகவும் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கமளித்துள்ளார். மேலும் ஈராக் படைத் தளபதி சுலைமானி கொல்லப் பட முன்பு ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் சூறையாடப் பட்டதையும் டிரம்ப் இதன் போது சுட்டிக் காட்டியிருந்தார்.

தற்போது உக்ரைன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய காரணத்தால், இச்சம்பவத்தால் பாதிக்கப் பட்ட பிரிட்டன், கனடா, உக்ரைன் போன்ற நாடுகளுடன் ஏற்கனவே பகையாளியாக இருந்த அமெரிக்காவும் ஈரானுக்கு எதிராகக் கைகோர்த்துள்ளன. இவை நான்கும் நேட்டோ உறுப்பு நாடுகள் ஆகும்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS