உலகம்
Typography

அமெரிக்க அதிபர் டிரம்பின் இராணுவ அதிகாரங்களைக் குறைப்பது அல்லது நீக்குவது என்ற தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் கொண்டு வருவது என எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.

இது தொடர்பில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், எதிர்வரும் திங்கட்கிழமை போர் அதிகாரங்கள் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஈரான் மீது அதிபர் டிரம்ப் இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரமும் கட்டுப்படுத்தப் பட முடியும் என்றும் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார். ஆயினும் பிரதிநிதிகள் சபையில் எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையுடன் உள்ள போதும், செனட் சபையில் டிரம்பின் குடியரசுக் கட்சியே பெரும்பான்மை வகிக்கின்றது. இதனால் நாடாளுமன்றத்தின் இந்த இரு அவைகளிலும் இத்தீர்மானம் நிறைவேற்றப் பட சாத்தியம் குறைவு என்றும் கணிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்காவும், ஈரானும் சர்வதேச சட்டங்களை மதித்து சுய கட்டுப்பாடுடன் இயங்க முன்வர வேண்டும் என்றும் இதன் மூலம் இவ்விரு நாடுகளும் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக வேண்டும் என்றும் போப் பிரான்சிஸ் வத்திக்கானில் அறிவித்துள்ளார்.

மறுபுறம் புதன்கிழமை ஈரானில் விபத்தில் சிக்கிய 176 பேரைப் பலி கொண்ட உக்ரைனின் பயணிகள் விமானம் ஈரான் ஏவுகணையால் தவறுதலாகத் தாக்கப் பட்டிருக்கலாம் என்றும் அதற்கு ஆதாரம் இருப்பதாகவும் சர்வதேச சமூகம் சந்தேகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த விமான விபத்து தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தவும் ஈரானுக்கு மேற்கத்தேய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்