உலகம்
Typography

அண்மையில் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிட்கு அமெரிக்கப் பாராளுமன்றத்தின் பெண் சபாநாயகரான நான்சி பெலோசி கருத்துத் தெரிவிக்கையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் அதனால் அவர் மீது கண்டனத் தீர்மானம் தாக்கல் செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

அடுத்தாண்டு இறுதியில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னால் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிடவுள்ளார். இவர் மீது பொய் வழக்குத் தொடருவதற்கு உக்ரைன் அதிபர் உதவியை டிரம்ப் நாடியதாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது கண்டனத் தீர்மானம் தாக்கல் செய்ய ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து சபாநாயகர் நான்சி பெலோசி புதன்கிழமை தொலைக் காட்சியில் உரையாற்றிய போது அதிபர் டிரம்ப், தன் சொந்த நலனுக்காக நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் சமரசம் செய்துள்ளார்.

உக்ரைன் நாட்டுக்கான இராணுவ உதவிக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் தன் அரசியல் எதிரியைப் பழி வாங்குவதற்காக உக்ரைன் அரசிடம் பேரம் பேசிய டிரம்ப், குறித்த இராணுவ உதவியை அளிக்காது கால தாமதம் செய்தார். இதனால் தான் நாட்டு மக்களின் நம்பிக்கையை நிலை நாட்டவென கண்டன தீர்மானத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்துள்ளேன் என நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

இதேவேளை கண்டன தீர்மான விவகாரத்தில் இறுதி வெற்றி தனக்கே கிடைக்கும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் குடியரசுக் கட்சியினர் முன்னெப்போதும் விட இப்போது ஒற்றுமையாக இருப்பதாகவும் எனவே நாம் வெற்றி பெறுவது உறுதி என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம் நேட்டோ மாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்க அதிபர் டிரம்பை கேலி செய்வது போல் வெளியான வீடியோவுக்கு அதிபர் டிரம்ப் பதில் அளிக்கையில் ஜஸ்டின் ட்ரூடோ இருமுகம் கொண்ட நபர் என விமர்சித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்