உலகம்
Typography

இந்தியாவின் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழையின் தீவிரம் காரணமாக கிட்டத்தட்ட 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

சென்னையில் திங்கட்கிழமை முதற்கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தவிர கனமழை காரணமாக திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடியிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.

மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மாத்திரம் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. கடலூர், ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு மாத்திரம் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. கோவையில் ஞாயிறு இரவு பெய்த கனமழையால் வீடுகளின் சுற்றுச் சுவர் இடிந்து ஏற்பட்ட விபத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மறுபுறம் பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகியவை பாதிக்கப் பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி அங்கு இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகவும் தெரிய வருகின்றது. பிரான்ஸில் மீட்புப் பணிகள் மிகவும் துரிதமாக முடுக்கி விடப் பட்டுள்ளன. ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப் பட்டுள்ளனர். மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணித்த 3 மீட்புப் படையினர் பலியானதாகவும் சோகமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

இதேவேளை அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் திங்கட்கிழமை திடீரென ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு பொது மக்கள் பீதியடைந்துள்ளனர். சேத விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. 2018 நவம்பரில் அலாஸ்காவில் ஏற்பட்ட வலிமையான நிலநடுக்கத்தில் அங்கு சாலைகள் மற்றும் பாலங்கள் மிகுந்த சேதம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்