உலகம்
Typography

1977 ஆமாண்டு ஆகஸ்ட் 20 ஆம் திகதி வொயேஜர் 1 செலுத்தப் பட 16 நாட்களுக்கு முன்பு சூரிய குடும்பத்தின் வெளிப்புற வாயுக் கோளங்களை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய வொயேஜர் 2 விண்கலம் சமீபத்தில் சூரிய குடும்பத்தைத் தாண்டி இண்டர்ஸ்டெல்லார் வெளியில் நுழைந்துள்ளது.

தனது நீண்ட சுற்று வளையப் பாதை காரணமாக இண்டர்ஸ்டெல்லாரில் நுழைய வொயேஜர் 1 ஐ விட அதிக காலம் எடுத்துக் கொண்ட இந்த விண்கலம் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய வாயுக் கோளங்களை ஆய்வு செய்த ஒரேயொரு விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பூமியில் இருந்து 18 பில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் சென்று கொண்டிருக்கும் வொயேஜர் 2 விண்கலத்தில் இருந்து பூமிக்குத் தகவல் வர
16 மணித்தியாலமும் 30 நிமிடமும் எடுக்கின்றது. 2018 ஆமாண்டே இவ்விண்கலம் சூரிய குடும்பத்தின் விளிம்பை அடைந்து விட்டதாக நாசா அறிவித்திருந்தது. மேலும் Heliosphere எனப்படும் சூரிய குடும்பத்தின் எல்லைப் பகுதிக்கு அப்பால் தற்போது சென்று கொண்டிருக்கும் வொயேஜர் 2 இன் செயற்திட்டம் இனி இண்டர்ஸ்டெல்லாரை ஆய்வு செய்வது தான்.

இந்த இண்டர்ஸ்டெல்லார் வெளியானது சூரியனுக்கும், ஏனைய நட்சத்திரங்களுக்கும் இடையே நட்சத்திரத் தூசு துகள்கள், விண்கற்கள் மற்றும் வால்வெள்ளிகள் நிறைந்த பகுதியாகும். 40 வருடங்கள் கழிந்து இவ்வளவு தொலைவு சென்றுள்ள இரு வொயேஜர் விண்கலங்களுமே பூமியுடன் இன்னும் தகவல் தொடர்பில் இருந்து வருகின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்