உலகம்
Typography

திங்கட்கிழமை சீனாவின் 70 ஆவது தேசிய தினம் வெகு விமரிசையாக அனுட்டிக்கப் பட்டது. இதன் போது டைனமன் சதுக்கத்தில் பதப் படுத்தப் பட்ட நிலையில் வைக்கப் பட்டுள்ள சீன கம்யூனிச ஆட்சியின் ஸ்தாபகர் மா சே துங் இன் உடலுக்கு சீன அதிபர் ஜின்பிங் மரியாதை செலுத்தினார்.

மேலும் சீனப் புரட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப் பட்ட இராணுவப் பேரணிகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஹாங்காங்கில் மக்களின் போராட்டமும் வெடித்துள்ளது.

ஹாங்காங்கில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தைக் கட்டுப் படுத்த அங்கு கண்ணீர்ப் புகைக் குண்டுகள் பாவிக்கப் படும் வீடியோக்கள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. மேலும் கடந்த ஜூன் மாதம் முதல் ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டம் நடந்து வரும் நிலையில் முதன்முறையாக போராட்டக் காரர் ஒருவர் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. இது தவிர ஹாங்காங்கின் அட்மிரால்டி பகுதியில் பிபிசி செய்தியாளர் ஒருவர் சேகரித்த செய்தியின் படி போராட்டங்களைக் கட்டுப்படுத்த போலீசார் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

மறுபுறம் சீனாவின் 70 ஆவது தேசிய தின கொண்டாட்டங்கள், இராணுவ அணிவகுப்பு மற்றும் பிரம்மாண்டமான பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நேரில் பார்வையிட தியானன்மென் சதுக்கத்தில் சீனக் கொடிகளுடன் சுமார் ஒரு இலட்சம் மக்கள் திரண்டிருந்தனர். தேசிய தினத்தை முன்னிட்டு சீனாவின் ஆயுத பலத்தைக் காண்பிக்கும் பல இராணுவ வாகனங்கள் மற்றும் ஏவுகணைகள் காட்சிப் படுத்தப் பட்டன. விழாவின் மத்தியில் சீன அதிபர் உரையாற்றும் போது உலகின் எந்தவொரு சக்தியாலும் எமது நாட்டை அசைத்துப் பார்க்க முடியாது என்று தெரிவித்தார்.

இந்த ஆயுத அணிவகுப்பில் காட்சிப் படுத்தப் பட்ட சீனாவின் அதிநவீன ஏவுகணையான டாங்ஃபெங் - 41 என்ற ஏவுகணை 15 000 கிலோ மீட்டர் தொலைவு தூரம் பயணித்து உலகின் எந்தவொரு இடத்தையும் தாக்கக் கூடியது ஆகும். அமெரிக்காவை இதன் மூலம் 30 நிமிடங்களுக்குள் தாக்க முடியும். அணுவாயுதம் மட்டுமன்றி 10 வகையான ஆயுதங்கள் மற்றும் 2500 கிலோ வெடிபொருட்களை இது சுமந்து செல்லக் கூடியது ஆகும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்