உலகம்
Typography

அமெரிக்க அரசின் வெறுப்பேற்றும் விதமான நடவடிக்கைகள் தொடர்ந்தால் அதனுடன் முழுமையான போருக்குத் தயாராக இருப்பதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது அமெரிக்கா தன் மீது தொடர்ந்து பொய்க் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருவதாகவும் இது அதன் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதற்கு வழிவகுக்கும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஆலையான அப்காய்க் மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயல்கள் மீது சனிக்கிழமை நடத்தப் பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்களால் பெரும் நாசம் ஏற்பட்டு உலக அளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. யேமெனில் உள்ள ஹௌத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய சுமார் 50 இலட்சம் பீப்பாய் எண்ணெய் நாசமான நிலையில், இதன் பின்னணியில் ஈரான் உள்ளது என உலகளாவிய ரீதியில் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில் அவர், 'சவுதி எண்ணெய் ஆலை மீது தாக்குதல் நடத்தியது யார் என நாம் அறிவோம். நிச்சயம் இக்குற்றவாளிகளுக்குப் பாடம் புகட்டுவோம். இதற்கு எதிர் வினையாற்ற எமது இராணுவம் தயார் நிலையில் தான் உள்ளது. தாக்குதலுக்குக் காரணம் யார் என சவுதி கூறும் வரை காத்திருப்போம்!' என்றுள்ளார்.

ஏற்கனவே சவுதி எண்ணெய் வயல்களில் தாக்குதல் நடத்தியது ஈரான் தான் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்திருந்ததை, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என ஈரான் மறுத்திருந்தது. இச்சூழலில் ஈரான் தான் தாக்குதல் நடத்தியது என்பதற்கு செயற்கைக் கோள் ஆதாரம் இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பதிலுக்கு ஈரான், 'அமெரிக்காவின் முக்கிய விமான மற்றும் விமானத் தாங்கித் தளங்கள் அனைத்தும் ஈரானைச் சுற்றி 2000 கிலோ மீட்டர் தூரத்தில் தான் உள்ளன என்பதை அமெரிக்கா நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்! தன் மீதான பொய்க் குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா தொடர்ந்தால் நிச்சயம் விபரீதமான விளைவுகள் ஏற்படும்.' என்று தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்