உலகம்
Typography

அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட டுவிட்டர் செய்தி ஒன்றில், 'பேரழிவு நாடுகளில் இருந்து வந்த ஜனநாயகக் கட்சி எம்.பிக்கள் உலகின் சக்தி வாய்ந்த அமெரிக்க அரசை விமர்சிக்கின்றார்கள்.

அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே திரும்பிச் செல்லட்டும். முதலில் அவர்களின் சொந்த நாடுகளில் உள்ள குறைகளைத் தீர்த்து விட்டு இங்கு வந்து கருத்துச் சொல்லட்டும்' என்று தெரிவித்திருந்தார்.

டிரம்பின் இனவெறியைத் தூண்டக் கூடிய விதத்தில் அமைந்திருந்த இந்த டுவிட்டர் கருத்துக்கு பல்வேறு தரப்புக்களிலும் இருந்து கண்டனங்கள் வலுத்துள்ளன. மேலும் இந்த விவகாரத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப் பட்டு ஓட்டெடுப்பு விடப்பட்டது. அதில் இதற்கு ஆதரவாக 240 வாக்குகளும், எதிராக 187 வாக்குகளும் பதிவாகின. டிரம்பின் குடியரசுக் கட்சியில் இருந்தும் 4 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனால் டிரம்பின் கருத்து மக்கள் மற்றும் இளவயதினர் மத்தியில் அச்சத்தையும், இனவெறியையும் தூண்டக் கூடியது என நாடாளுமன்ற உறுப்பினர் டாம் மலின்னவ்கி கருத்துத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தனக்கு எதிராக நிறைவேற்றப் பட்ட கண்டனத் தீர்மானத்துக்குப் பதில் அளித்த டிரம்ப், தன்னுடைய கருத்துக்கள் இனவெறியைத் தூண்டவிலை என்றும் இது ஜனநாயகக் கட்சியின் விளையாட்டு என்றும் இந்த சதியில் குடியரசுக் கட்சியினரும் விழக் கூடாது என்றும் டுவிட்டரில் மீளத் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் சர்ச்சைக்குரிய டுவிட்டர் கருத்து ஆப்பிரிக்க நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட ரஷிதா டலீப், ஒகாசியோ கோர்டெஸ், ஐயானா பிரெஸ்லி மற்றும் இல்ஹான் உமர் ஆகியோரை மறைமுகமாகத் தாக்கும் விதத்தில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS