உலகம்
Typography

அண்மைக் காலமாக உலகின் இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போரும் அதனால் அவையிரண்டுக்கும் இடையேயான நல்லுறவில் ஏற்பட்டுள்ள விரிசலும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

இதனால் உலக அளவில் பெரும் பொருளாதாரப் பாதிப்பு ஏற்படும் என சர்வதேச நாணய நிதியமும் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் டிரம்பின் அண்மைய கூற்றுப்படி அமெரிக்கா பிற நாட்டுப் பொருட்களுக்கு குறைவாக வரி விதிப்பதாகவும் ஆனால் அமெரிக்கப் பொருட்களுக்கு பிற நாடுகள் அதிக வரி விதிப்பதாகவும் சாடியுள்ளார். அதாவது சீனாவில் அமெரிக்கப் பொருட்களுக்கு 25% வீத வரி விதிக்கப் படுவதாகவும் ஆனால் அமெரிக்காவில் சீனப் பொருட்களுக்கு 2.5% வீத வரி தான் விதிக்கப் படுவதாகவும் டிரம்ப் கூறுகின்றார். மேலும் இதைப் பலமுறை எடுத்துக் கூறி வரியைக் குறைக்குமாறு வலியுறுத்திய போதும் சீனா பொருட் படுத்தாது இருப்பதால் தான் சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா வரியை அதிகரித்தது என டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு போட்டி தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த சமீபத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இதை அடுத்து டிரம்ப் அண்மையில் அளித்த பேட்டியில் அமெரிக்காவில் மீண்டும் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் எம்மை ஏமாற்றி விடலாம் என எதிர்பார்ப்பதாகவும் ஆனால் அது நடக்காது, நாமே மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்றும் தெரிவித்துள்ளார். சீனா தொடர்ந்தும் தன்போக்கை மாற்றாது விட்டால் கடுமையான நடவடிக்கைகளை அது சந்தித்து பெரியளவு பாதிப்பை அடையும் எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

சீனப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 10% வீதத்தில் இருந்து 25% வீதத்துக்கு உயர்த்துவதாக டிரம்ப் எடுத்துள்ள முடிவு சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல நாடுகளின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS