உலகம்
Typography

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப் படும் பொருட்களுக்கு 10% வீதத்தில் இருந்து 25% வீதம் வரைக்கும் வரியை உயர்த்தி மீண்டும் அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த வருடம் ஜூலை முதற்கொண்டு சீன இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்து பின்பு ஆகஸ்ட்டு மற்றும் செப்டம்பரில் மேலும் அதிகரித்திருந்தது. இதற்குப் பதிலடியாக சீனாவும் அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதித்தது.

இதனால் உலக அளவில் வர்த்தகப் போர் ஏற்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புக்கள் கவலை தெரிவித்திருந்தன.இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 10% இலிருந்து 25% வீதமாக உயர்த்தப் படும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் டுவிட்டர் பதிவின் மூலம் 5000 சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப் படும் எனத் தெரிய வருகின்றது.

ஜனவரியிலேயே மேற்கொள்ளப் படவிருந்த இந்த முடிவு இரு நாட்டுக்கும் இடையே நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தையால் தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது. ஆனால் இரு தரப்புக்கும் இணக்கம் ஏற்படாது அமெரிக்க எடுத்துள்ள இந்த முடிவானது வர்த்தகப் போரை மேலும் தீவிரப் படுத்தவுள்ளது. இந்நிலையில் சீன அதிகாரிகள் குழு இன்னும் இரு நாட்கள் கழித்து வாஷிங்டனில் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிரடி முடிவால் முழு உலகுமே ஆட்டம் கண்டுள்ளது. சீனாவின் மிகப் பெரிய ஷாங்காய் காம்போசைட் எல்லாம் ஒரே நாளில் சுமார் 5.5% வீத சரிவைக் கண்டுள்ளன. இந்திய சந்தைகளிலும் சுமார் 1% வீத இறக்கம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை சீனா தனது பாதுகாப்பு இலட்சியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் தான் BRI எனப் படும் ஒற்றைப் பட்டை ஒற்றை வீதி கொள்கையை அதாவது சர்வதேச பொருளாதார வழித்தடத்தைப் பயன்படுத்துவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

BRI கொள்கை மூலம் சீனா, ஆசிய ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களைச் சேர்ந்த பல நாடுகளை சாலை வழியாகவும் கடல் வழியாகவும் இணைக்கத் திட்டமிட்டு வருகின்றது. இதன் மூலம் குறித்த நாடுகளுடனான வர்த்தக உறவு அதிகரிக்கும் என்றும் சீனா எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்