உலகம்
Typography

பிரான்சின் பெரும் கலைச்சொத்தும், உலகெங்கிலுமுள்ள கட்டடிடக் கலையார்வலர்களின் காட்சியகமும், கத்தோலிக்க மக்களின் நம்பிக்கைக்கும், மதிப்பிற்குமுரியதுமான பாரிஸ் 'நோர்த்தே-டேம் கதீட்ரலில் பெருந் தீ பற்றிக்கொண்டது. மேலெழுந்த கடுந்தீயில் தேவாலயத்தின் உயர் கோபுரம் எரிந்து விழுந்தது.

15.04.2019 மாலை பற்றிக் கொண்ட பெருந்தீயில், உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படாத போதும், பாரிஸ் நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான இப்பேராலயம், எரிந்து விழுவதை வீதிகளில் கூடிநின்ற மக்கள் பெருஞ்சோகத்துடன் பார்த்த வண்ணமிருந்தார்கள். பலர் கண்ணீர் விட்டுக் கதறவும் செய்தார்கள்.

12ம் நூற்றாண்டில், புகழ்பெற்ற ஐரோப்பிய கோதிக் கட்டிடக்கலை (Gothic architecture) பாணியில் கட்டப்பட்ட பேராலயம். பாரிஸ் நாரின் முதன்மைப் பேராலயமும் இதுவே. வருடந்தோறும் 12 மில்லியன் மக்கள், இவ்வாலயத்தின் கலையழகு காணவும், வழிபாடியற்றவும், வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன

தீ விபத்துக்கான காரணம் இன்னமும் சரியாகத் தெரியவில்லை. மாலை 5.50 மணிக்கு ஆலயத்தின் பிற்பகுதில் ஏற்பட்ட தீ, வேகமாகப் பரவி, பெரும் அழிவினைத் தந்தபோதும், சுமார் 400 தீயணைப்பு வீரர்கள் பெருந்தீயிளை அணைக்கும் பணியில் செயற்பட்டு, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், மிக விலையுயர்ந்த நினைவுச் சின்னங்கள் சேமிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(Notre Dame) நோட்ரே டேம் எனும் பிரெஞ்சு மொழியாடலுக்கு, தமிழில் எமது அரசி அல்லது எமது அன்னை எனப் பொருள் சொல்லலாம். கத்தோலிக்கர்களின் தவக்கால ஞாயிறு அன்மித்த காலத்தில் ஏற்பட்ட இப் பெரும் தீவிபத்து குறித்து உலகெங்கிலும் வாழும் கத்தோலிக்க மக்கள் மட்டுமல்லாது, அரசியற் தலைவர்களும், கலையார்வலர்களும் கவலை தெரிவித்து வருகிறார்கள்.

 பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் ஆலயப் பகுதிக்கு விரைந்து, தீயணைப்பு நடவடிக்கைகளை நேரடியாக கவனித்ததுடன், பேராலயம் மீளவும் புணரமைக்கவும் உறுதி தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்