உலகம்
Typography

எத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் விபத்துக்குள்ளானதன் பலனாக எத்தியோப்பிய சீன மற்றும் இந்தோனேசிய ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் விமானங்கள் அனைத்தும் உடனடியாகத் தரையிறக்கப் பட்டதுடன் வர்த்தக ரீதியிலான சேவையில் இருந்தும் போயிங் 737 ரக விமானங்களை முழுவதுமாக நீக்கம் செய்துள்ளது சீனா.

ஞாயிற்றுக்கிழமை எத்தியோப்பியாவில் விழுந்து நொறுங்கிய போயிங் 737 ரக விமானத்தில், பயணித்த 4 இந்தியர்கள் அடங்கலாக அனைத்து 157 பயணிகளும் பலியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆக்டோபரில் இந்தோனேசியாவில் போயிங் 737 மேக்ஸ் 8 என்ற இதே ரக விமானம் விபத்தில் சிக்கியதில் 189 பேர் உயிரிழந்திருந்ததுடன் இரு விபத்துக்களும் விமானம் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே நிகழ்ந்துள்ளன. இவ்விரு விபத்துக்களுக்கும் முறையான காரணம் இதுவரை தெரியவில்லை.

இதனால் தான் பாதுகாப்புக் காரணம் கருதி போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை சேவையில் இருந்து நிறுத்துவதாகவும் இவ்வகை விமானங்களின் பாதுகாப்புத் தொடர்பில் விரைவில் ஆய்வு செய்யப் படும் என்றும் சீனா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் முதன்மை விமானத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான போயிங் நிறுவனத்தின் முக்கிய சந்தையாக சீனா உள்ளது.

இதேவேளை எத்தியோப்பிய விமான விபத்தின் பின்னர் தேடப்பட்ட கருப்புப் பெட்டிகளில் ஒன்று கிடைத்துள்ளதாகவும், அது சேதமடைந்துள்ளதாகவும் போயிங் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விமான விபத்தில் பலியான இந்தியர் நால்வரில் ஒருவரான ஐ.நாவுக்கான இந்திய அதிகாரி ஷிகா கார்க் என்பவரின் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், ஷிகா கார்க் இனை அறிந்தவர்கள் எவரேனும் இருந்தால் இதற்கு உதவுமாறும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்