உலகம்
Typography

எந்தவொரு அதிகாரமும் இல்லாத வடகொரியாவின் நாடாளுமன்றத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றுள்ளதுடன் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தும் உள்ளனர்.

வடகொரியாவில் பல தலைமுறைகளாக அதிபர் கிம் ஜொங் உன் இன் குடும்ப ஆட்சி இடம்பெற்று வருகின்றது. பொது மக்களும் கிம் தலைமையிலான அரசுக்குத் தொடர்ந்து விசுவாசம் மிக்கவர்களாக இருந்து வருகின்றனர்.

அங்கு அரசு மற்றும் இராணுவம் உட்பட அனைத்துவித அதிகாரமும் அதிபருக்கே உள்ளது. நாடாளுமன்றத்துக்கென எந்தவித முக்கிய அதிகாரமும் கிடையாது. அந்நாட்டு அதிபரால் வரைவு செய்யப் படும் சட்டங்களுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காது ஒப்புதல் வழங்குவது நாடாளுமன்றத்தின் கடமையாகும்.

இந்நிலையில் தான் வழமை போன்று 5 ஆண்டுகளுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை பெயரளவில் அங்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் கிம் ஜொங் உன் பியாங்யொங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். நாட்டின் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு இலட்சக் கணக்கான மக்கள் வாக்களித்தனர். வடகொரியாவில் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப் படுவதுடன் இம்முறை 700 பிரதிநிதிகள் வரை தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை வியட்நாமில் வடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே இடம்பெற்ற 2 ஆவது நேரடி சந்திப்பு எந்தவித ஒப்பந்தமும் எட்டப் படாது தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில் தலைநகர் பியாங்யாங் இற்கு அருகே அமைந்துள்ள சானும்டாங்க் ஏவுதளத்தில் இருந்து எவுகணைகளை ஏவிப் பரிசோதிப்பதற்கான பணிகளை வடகொரியா ஆரம்பித்திருப்பதற்கான சான்று செயற்கைக் கோள் புகைப்படங்கள் மூலம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து வடகொரியர்கள் மீண்டும் தமது ஏவுகணைச் சோதனைகளைத் தொடர்ந்தால் நிச்சயம் அது ஏமாற்றத்தில் தான் முடியுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்துத் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்