உலகம்
Typography

மிக மோசமான பொருளாதார வீழ்ச்சி மற்றும் அரசியல் குழப்பங்களால் தவித்து வரும் வெனிசுலா நாட்டில் நாடளாவிய ரீதியில் 20 மணித்தியால மின்வெட்டு ஏற்பட்டதால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

எண்ணெய் வளம் மிக்க மிகவும் செழிப்பான நாடாக வெனிசுலா திகழ்கின்ற போதும் அங்கு நிகழும் மோசமான அரச நிர்வாகம் மற்றும் அரசின் முடிவுகளால் தான் வெனிசுலா இந்த அவல நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது.

2010 இல் வெனிசுலா அதிபர் சாவேஸ் தனியார் நிறுவனங்களிடம் இருந்து பொறுப்பை அரச அமைச்சகங்களிடம் கொடுத்ததில் இருந்து அங்கு அரசப் பிரநிதிகள் செய்து வரும் ஊழல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப் பட்டது. 2014 ஆமாண்டு முதல் மெல்ல மெல்ல அதிகரித்து வந்த பணவீக்கம் அங்கு தற்போது உச்ச நிலையில் உள்ளது.

இந்நிலையில் தற்போது அங்கு அரசியல் குழப்பமும் நிகழ்ந்து வருகின்றது. பல்வேறு முறைகேடுகளின் மத்தியில் தேர்தலில் வெற்றி பெற்று அதிபரான நிக்கோலஸ் மதுரோ பதவி விலகக் கோரி அங்கு எதிர்க் கட்சிகளும், பொது மக்களும் போர்க் கொடி தூக்கினர். மேலும் நாடாளுமன்றத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள எதிர்க்கட்சித் தலைவரும், சபாநாயகருமான ஜுவான் குவைடோ தன்னை இடைக்கால அதிபராகப் பிரகடனம் செய்து கொண்டார். இவருக்கு அமெரிக்கா உட்பட பல சர்வதேச நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.

சர்வதேசங்களின் ஆதரவோ மனிதாபிமான உதவிகளோ வெனிசுலா வந்தடைவதைத் தடுத்துள்ள அதிபர் நிக்கோலஸ் மதுரோ தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நிக்கோலஸ் மதுரோவின் செயற்பாடுகளுக்கு எதிராகவும், மறுபடி தேர்தல் நடத்தவும் கோரி அமெரிக்கா இவ்விவகாரத்தை ஐ.நா சபைக்குக் கொண்டு சென்றது. ஆனால் ரஷ்யாவும், சீனாவும் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இதை நிராகரித்து விட்டன. இதனால் தற்போது சிறியளவிலான அடிப்படைப் பொருட்களும் கிடைக்காது பல்லாயிரக் கணக்கான வெனிசுலா மக்கள் நிர்க்கதிக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.

இந்த சூழலில் வெனிசுலாவில் நாடாளவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் 20 மணித்தியாலத்துக்கும் மேலாக மின்னிணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் உட்பட வணிக வளாகங்களும் முடங்கின. பாடசாலைகளும் கல்லூரிகளும் மூடப்பட்டன. மருத்துவ மனை ஒன்றில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

2012 ஆமாண்டுக்குப் பின் வெனிசுலாவில் ஏற்பட்ட மோசமான இந்த மின் துண்டிப்பு தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்