உலகம்
Typography

சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென உள்ளே புகுந்து நடத்திய கத்திக் குத்துத் தாக்குதலில் 20 குழந்தைகள் காயமடைந்ததுடன் அவர்கள் அனைவரும் உடனே வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளனர்.

சீனத் தலைநகர் பீஜிங்கில் இது போன்று பள்ளிச் சிறுவர்கள் மீது நடத்தப் படும் தாக்குதலானது மிக அரிதான ஒரு வன்முறைச் சம்பவம் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

காயம் அடைந்த குழந்தைகளில் 3 பேருக்கு மோசமான காயம் என்றும் ஆனால் அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் அரசு அறிவித்துள்ளது. குறித்த வைத்திய சாலைக்கு வெளியே கிட்டத்தட்ட 6 போலிஸ் கார்கள் நிறுத்தப் பட்டுள்ளதுடன் இந்தத் தாக்குதலின் பின்னணி குறித்து மேலதிகத் தகவல்களை வெளியிட அரசாங்கம் மறுத்து விட்டது.

பொதுவாக பொது மக்கள் மத்தியில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறும் வீதம் மிகக் குறைவான நாடான சீனாவில் அண்மைய வருடங்களாக கத்தி மற்றும் அரிவாள் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது. இதிலும் குறிப்பாக சிறுவர்களைக் குறி வைத்து நடத்தப் படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.
2017 ஜனவரி மாதம் தெற்கு சீனாவில் மர்ம மனிதன் ஒருவர் நடத்திய கத்திக் குத்துத் தாக்குதலில் 12 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் ஈடுபட்டுக் கைது செய்யப் பட்ட குற்றவாளியை சீன அரசு இம்மாதத் தொடக்கத்தில் தூக்கிலிட்டது.

இதேவேளை தென்னாப்பிரிக்காவின் பிரிடோரியா மற்றும் மபோபேன் பகுதிகளை இணைக்கும் வழித்தடத்தில் 2 ரயில் வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாகச் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற ரயில் மீது பின்னால் வந்த ரயில் வேகமாக மோதியதில் 300 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தும் 4 பேர் உயிரிழந்தும் உள்ளனர். படுகாயம் அடைந்த 82 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்