உலகம்
Typography

வடகிழக்கு இந்தோனேசியாவின் மொலுக்காஸ் மாகாணத்தில் திங்கட்கிழமை அதிகாலை 6.6 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.

டெர்னட்டே நகருக்கு வடமேற்கே 175 Km தொலைவில் பூமிக்கு அடியில் 60 Km ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகளும், கட்டடங்களும் ஆட்டம் கண்டன. இதனால் பீதி அடைந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீதிகளிலும், திறந்த வெளிகளிலும் கூடினர்.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப் படாத அதே நேரம் சேத விபரங்கள் மற்றும் உயிரிழப்புக்கள் தொடர்பாக உடனடித் தகவல் எதுவும் இதுவரை வெளியிடப் படவில்லை. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் தகவல் படி இந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 7 என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. டிசம்பரில் இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 400 பொது மக்கள் வரை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஆப்கானிஸ்தானின் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 30 ஊழியர்கள் உள்ளே சிக்கிப் பலியாகி உள்ளனர். வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் படக்‌ஷான் மாகாணத்தில் கொஹிஸ்டான் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இவ்விபத்தில் மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் அண்மையில் நடந்த பாரிய விபத்தாக இது கருதப் படுகின்றது.

நிலவளம் பொருந்திய ஆப்கானிஸ்தானில் சட்ட விரோத சுரங்க அகழ்வு என்பது சாதாரணமாக இடம்பெறும் ஒரு நிகழ்ச்சி என்பதுடன் இவர்களுக்குத் தலிபான்களின் ஆதரவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்