உலகம்
Typography

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சாகும் நிலையிலுள்ள தனது குழந்தையைப் பார்க்க அதன் தாய்க்கு விசா அனுமதி அளிக்க அமெரிக்கா மறுத்திருந்த நிலையில் தற்போது அவருக்கு மனிதாபிமான அடிப்படையில் விசா வழங்கப் படுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

தற்போது எகிப்தில் வசித்து வரும் யேமெனைச் சேர்ந்த பெண்மணியான ஷைமா ஸ்விலே என்பவரின் 2 வயது மகன் அப்துல்லா ஹாஸன் மூளை சம்பந்தப் பட்ட வியாதியால் பாதிக்கப் பட்டு கலிபோர்னியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அக்குழந்தை பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கைவிரித்திருந்த நிலையில் தன் குழந்தையை நேரில் சென்று பார்க்க ஷைமா ஸ்விலேக்கு இயலாத சூழல் ஏற்பட்டது.

இதற்குக் காரணம் குறித்த சில முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு அமெரிக்காவில் நுழைய டிரம்ப் நிர்வாகத்தின் தலைமையில் இயற்றப் பட்ட சட்டத்தின் அடிப்படையில் தடை விதிக்கப் பட்டமையே ஆகும். இந்நிலையில் தற்போது மனிதாபிமான அடிப்படையில் பலர் ஷைமா ஸ்விலேக்கு குரல் கொடுத்ததால் அவருக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து விசா வழங்க அமெரிக்கா முன் வந்துள்ளது.

இதன் மூலம் இன்று புதன்கிழமை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை சென்றடையும் ஷைமா ஸ்விலே தன் குழந்தைக்கு வழங்கப் பட்ட உயிர் காக்கும் கருவி அகற்றப் பட முன்பு தன் மகனைக் காணும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்த பயணத்தடை உத்தரவின் மூலம் சிரியா,யேமென்,சோமாலியா, லிபியா,வடகொரியா,வெனிசுலா மற்றும் வடகொரியா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த பொது மக்கள் அமெரிக்காவுக்கு நுழைய விசா அனுமதிக்கப் படுவதில்லை.

ஆனால் உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு சில தளர்வுகளை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS