உலகம்
Typography

திங்கட்கிழமை காலை மத்திய ஆப்பிரிக்க நாடானா கேமரூனின் தலைநகரான பாமெண்டாவிலுள்ள பிரிஸ்பேட்டரியன் பள்ளியில் இருந்து சுமார் 70 பள்ளிக் குழந்தைகள், அதிபர், ஆசிரியர் அடங்கலாக 78 பேரை ஆயுதம் தாங்கிய போராளிகள் கடத்திச் சென்றுள்ளனர்.

உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தை அடுத்துப் பாரிய தேடு பணியினை கேமரூன் இராணுவம் முடுக்கி விட்டுள்ளது.

கேமரூனின் வடமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளை கடந்த சில வருடங்களாக ஆக்கிரமித்துள்ள பிரிவினைவாத போராளிகளே இந்தக் கடத்தல் சம்பவத்தை செய்திருக்கக் கூடும் என பிராந்திய கவர்னர் அடோல்பே லேலே லஃப்ரிக்குவே குற்றம் சாட்டியுள்ளார். ஆங்கிலம் பேசும் இரு பகுதிகளின் விடுதலையை வலியுறுத்தி வரும் போராளிகள் குறித்த பிரிஸ்பேட்டரியன் பள்ளியைப் புறக்கணிக்குமாறு முன்னமே மாணவர்களுக்கு அழுத்தம் தெரிவித்திருந்தனர். ஆனால் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட பள்ளிக் குழந்தைகளின் இக்கடத்தல் செயலில் தாம் ஈடுபட்டதாக இதுவரை எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை.

ஆனால் இக்குழந்தைகள் கடத்தப் படும் சம்பவம் வீடியோவில் பதிவிடப் பட்டு சில கடத்தல்காரர்களால் சமூக வலைத் தளங்களில் வெளியிடப் பட்டுள்ளது. இந்த வீடியோவில் ஒரு சிறிய அறையில் அடைக்கப் பட்ட குறித்த குழந்தைகள் மிகுந்த பதற்றத்துடன் காணப் பட்ட அதேவேளை அவர்கள் தமது பெயரையும் எங்கிருந்து வந்தோம் என்பதையும் கூறுமாறு போராளிகள் வற்புறுத்தப் படுவதும் காட்டப் பட்டுள்ளது.

ஆக்டோபர் 19 ஆம் திகதி அட்டியேலா இருமொழி உயர் தரப் பள்ளியில் இருந்து இதே போன்று 5 மாணவர்கள் கடத்தப் பட்டிருந்ததுடன் இன்று வரை அவர்கள் எங்கு மறைத்து வைக்கப் பட்டுள்ளனர் என்ற தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேமரூன் அதிபர் போல் பியா 1982 ஆமாண்டு முதல் பதவியில் உள்ளார் என்பதுடன் அண்மையில் 7 ஆவது தடவையாக 70% வீதத்துக்கும் அதிகமான வாக்குடன் அவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டும் இருந்தார்.

1884 இல் முதலில் ஜேர்மனியின் காலனியாக கேமரூன் ஆக்கிரமிக்கப் பட்டது. 1916 இல் பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு துருப்புக்களின் அழுத்தத்தினால் ஜேர்மனியர்கள் வெளியேறினர். 3 வருடங்களில் பிரிவுற்ற கேமரூனில் 80% வீதமானவர்கள் பிரெஞ்சு மொழி பேசுபவர்களாகவும் 20% வீதமானவர்கள் ஆங்கிலம் பேசுபவர்களாகவும் மாறினர். 1960 இல் பிரெஞ்சு அரசால் ஆளப் பட்ட கேமரூன் விடுதலை பெற்றது. இதை அடுத்து மேற்கொள்ளப் பட்ட ஒப்பந்தத்தில் தெற்கே உள்ள ஆங்கிலம் பேசும் கேமரூனியர்கள் கேமரூன் அரசுடனும் வடக்கேயுள்ள ஆங்கிலம் பேசும் கேமரூனியர்கள் ஆங்கிலம் பிரதான மொழியாகவுள்ள நைஜீரியாவுடனும் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்