உலகம்
Typography

அண்மையில் பாகிஸ்தானில் மத அவமதிப்புக் குற்றத்தில் நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்ட கிறித்தவப் பெண்ணுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம் வலுப்பெற்றுள்ளது.

மாநில அரசுடன் மோத வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இப்போராட்டக் காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். லாஹூரின் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த ஆசியா பீபி என்ற பெண்ணே இந்தக் குற்றம் சாட்டப் பட்ட நபர் ஆவார்.

சிறுபான்மைக் கிறித்தவ மதத்தைச் சேர்ந்த ஆசியா பீபி தனது அண்டை வீட்டாருடன் தகராறு ஏற்பட்ட போது இஸ்லாமியர்களின் மதிப்புக்குரிய இறை தூதர் முகமது நபியைத் தரக் குறைவாகப் பேசியுள்ளார். 2010 ஆமாண்டு ஆசியா பீபிக்க்கு இவ்வழக்கு தொடர்பில் மரண தண்டனை விதிக்கப் பட்டது. இதனை 2014 இல் லாகூர் உச்ச நீதிமன்றமும் உறுதிப் படுத்தித் தீர்ப்பளித்தது. தொடர்ந்து சிறை வாசம் அனுபவித்து வந்த ஆசியா பீபி தனது மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் மேன்முறையீடு செய்து சுமார் 3 நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தும் வந்தனர்.

புதன்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் ஆசியா பீபிக்கு விதிக்கப் பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்தே பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி போன்ற பெரும் நகரங்களிலும் ஏனைய பகுதிகளிலும் இஸ்லாமிய அமைப்புக்களைச் சேர்ந்த பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இப்போராட்டக் காரர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுத்த அறிக்கையில், நீதிமன்ற தீர்ப்பை பொது மக்கள் மதிக்க வேண்டும் எனவும் அரசுக்கு எதிராக யாரும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றும் பொது மக்களை வன்முறையில் தூண்டி விடுபவர்கள் மீதும், பொதுச் சொத்துக்களை சேதப் படுத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் தெரிவித்துள்ளார்.

8 ஆண்டுகள் தனிமைச் சிறையில் கழித்த ஆசியா பீபியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள காரணத்தால் அவர் நாட்டை விட்டு வெளியேறும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப் படுகின்றது. இவருக்கு கனடா போன்ற சில நாடுகள் தஞ்சம் அளிக்க முன் வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2012 ஆமாண்டு யூடியூப்பில் வெளியான இஸ்லாமுக்கு எதிரான சர்ச்சைக்குரிய வீடியோக்களை அடுத்து பாகிஸ்தானில் வெடித்த வன்முறையில் கிட்டத்தட்ட 14 பொது மக்கள் கொல்லப் பட்டிருந்தனர்.

சுமார் 197 மில்லியன் சனத்தொகையைக் கொண்டுள்ள பாகிஸ்தானில் வெறும் 4 மில்லியனுக்கும் குறைவான சிறுபான்மை கிறித்தவர்கள் தான் வசிக்கின்றனர். பெரும்பானையின முஸ்லிம்களை அடுத்து அங்கு அதிகளவு சிறுபான்மை இனத்தவராக இந்துக்கள் காணப் படுகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்