உலகம்
Typography

இந்தியக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பாகிஸ்தானுடனான தனது உறவை அமெரிக்கா பார்க்கக் கூடாது என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரான ஷாஹ் மெஹ்மூட் குரேஷி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அமெரிக்காவுடனான பாகிஸ்தானின் உறவு என்பது மிக இலகுவில் வகைப் படுத்தக் கூடிய ஒன்று அல்ல என்றும் குரேஷி தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான வேறுபாடுகள் அனைத்தையும் ஒரே நாளில் தீர்க்க முடியும் என எண்ணுவதும் தவறான ஒரு கண்ணோட்டமே ஆகும் எனவும் ஊடகங்களுக்கு குரேஷி தெரிவித்துள்ளார். ஆனாலும் தெற்காசிய வலயத்தில் அமைதியையும், ஸ்திரத் தன்மையையும் பேணுவதற்கு பாகிஸ்தான் ஆற்றி வரும் பங்களிப்பையும் சர்வதேசம் புரிந்து கொள்வது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஜனவரியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பாகிஸ்தானைக் கடுமையாகக் குற்றம் சாட்டிப் பேசுகையில் இவ்வாறு கூறியிருந்தார். அதாவது பாகிஸ்தானானது பொய்களையும், வஞ்சகத்தையும் தவிர வேறு எதனையுமே அமெரிக்காவுக்கு அளிப்பதில்லை என்றும் தீவிரவாதிகளுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடமாக தொடர்ந்து விளங்கி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து அமெரிக்காவும், பாகிஸ்தானுக்கும் இடையேயான இராஜதந்திர உறவு மேலும் பலவீனம் அடைந்தது.

எனினும் இந்த உறவு தற்போது படிப்படியாக வலுவடைந்து வருவதாகத் தெரிவித்துள்ள குரேஷி, சுமார் 7 தசாப்தங்களுக்கு முன்பிருந்த ஆப்கான் மற்றும் இந்திய அரசியல் சூழ்நிலையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியை அணிந்து கொண்டு பாகிஸ்தானுடனான உறவை இன்றும் பார்ப்பது என்பது முறையான ஒன்று அல்ல என முல்ட்டனில் பத்திரிகையாளர்களுக்குக் கூறியுள்ளார். சமீபத்தில் தான் இவர் அமெரிக்காவுக்கான 10 நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியிருந்தார்.

அமெரிக்காவில் குரேஷி அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் மைக்கேல் பொம்பேயோ மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் பொல்ட்டன் ஆகியோரை சந்தித்துப் பேசியிருந்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்