உலகம்
Typography

9 நாட்களுக்கு முன்பு செப்டம்பர் 28 ஆம் திகதி இந்தோனேசியாவின் சுலைவேசி தீவை மையமாகக் கொண்டு 7.7 ரிக்டர் அளவுடைய வலிமையான நிலநடுக்கமும் அதன் விளைவால் ஏற்பட்ட சுனாமி அலைகளும் தாக்கியிருந்தன.

இதில் பலியானவர்கள் எண்ணிக்கை 1000 இற்கும் அதிகம் என உறுதிப் படுத்தப் பட்ட நிலையில் தற்போது காணாமற் போயுள்ளவர்களது எண்ணிக்கை மாத்திரம் 5000 ஐ எட்டியுள்ளது என அதிகாரிகள் உறுதிப் படுத்தியுள்ளனர்.

தற்போது மீட்புப் பணிகள் மேலும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தான் பலராவு, பெடோபோ போன்ற கிராமங்களில் நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் பலியானவர்கள் எண்ணிக்கை திருத்தமாக இன்னமும் கணிக்கப் படாத காரணத்தால் தான் 5000 பேரைக் காணவில்லை என அறிவிக்கப் பட்டுள்ளது. நிலச்சரிவு அல்லது சகதிகளில் பலர் சிக்கி இறந்திருக்கலாம் எனவும் இவர்களது உடல்களை உடனே மீட்க முடியாத சூழல் காணப்படுவதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

ஆனால் தற்போது நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்த 1763 சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன. பசுபிக் சமுத்திரத்தின் நெருப்பு வளையம் எனப் படும் Ring of Fire என்ற வலயத்தில் அமைந்துள்ள இந்தோனேசியாவில் உலகில் ஒரு வருடத்தில் மிக அதிகளவு நில அதிர்வுகளும் எரிமலை செயற்பாடுகளும் நிகழ்ந்து வருகின்றன. முன்னதாக 2004 ஆமாண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 9.2 ரிக்டர் நிலநடுக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட சுனாமி அலைகளால் அதிகம் பாதிக்கப் பட்ட இந்தோனேசியாவில் 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தென்னமெரிக்க நாடான ஹைட்டியின் வடமேற்கில் 5.9 ரிக்டர் அளவில் சற்று வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 11 பேர் பலியானதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். நிலநடுக்கம் தலைநகர் போர்ட் ஆஃப் பிரின்ஸ் இலும் உணரப் பட்டதுடன் மையம் கொண்டிருந்த சில தீவுப் பகுதிகளில் குறிப்பிடத்தக்களவு வீடுகளும், கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.

ஹைட்டி மக்களை அமைதி காக்குமாறும், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அதிபர் மோய்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்