உலகம்
Typography

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முன்னாள் தேர்தல் பிரச்சார ஆலோசகர் மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆலோசகருமான ஜார்ஜ் பபடோ போலஸ் என்பவர் கைது செய்யப் பட்டு 14 நாட்களுக்கு சிறை வாசம் அனுபவிக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர் 2016 ஆமாண்டு தேர்தல் பிரச்சார சமயத்தில் ரஷ்யாவுடன் ரகசியத் தொடர்பு வைத்திருந்ததாகப் புகார் எழுந்ததை அடுத்தே கைது செய்யப் பட்டுள்ளார்.

2016 ஆமாண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டிரம்ப் வெற்றி பெற தேர்தல் பிரச்சார சமயத்தில் ரஷ்யா மறைமுகமாக உதவியதாகக் குற்றம் சாட்டப் பட்டது. இது தொடர்பான விசாரணையை அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI நடத்தி வருகின்றது. இதன் போது விசாரிக்கப் பட்ட ஜார்ஜ் பபடோபோலஸ் பொய்யுரைத்ததாகக் குற்றம் சாட்டப் பட்டு 14 நாட்கள் சிறையில் அடைக்கவும், மேலதிக விசாரணையை மேற்கொள்ளவும் என அமெரிக்க மாவட்ட நீதிபதி ரந்தோல்ப் மாஸ் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இவருக்கு $9500 டாலர்கள் அபராதமும் 1 வருட பரோலும் சமூக சேவையும் விதித்தும் தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது. 2016 இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் உச்சக் கட்டத்தில் இருந்த போது மக்களின் ஆதரவை அதிகம் பெற்றிருந்த ஹிலாரி கிளிங்டன் மீது அவதூறும் மின்னஞ்சல்கள் ஹேக்கிங்கும் செய்யப் பட்டதாலும் இறுதிக் கட்டத்தில் அவர் தோல்வியுறக் காரணமாக இருந்தது என்று பரவலாகக் கருதப் படுகின்றது. மேலும் இதன் பின்னணியில் ரஷ்யா செயற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தான் ரோபெர்ட் முல்லெர் தலைமையில் FBI விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த விசாரணை காரணமாக அதிபர் டிரம்பின் உள்ளதிகாரப் பிரிவு மற்றும் தனிப்பட அவருக்கும் அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது. இவ்விசாரணையின் பின்னதாக கிட்டத்தட்ட 35 பேர் குற்றம் சாட்டப் பட்டு இதில் 5 பேர் மீது வலுவான விசாரணை நடத்தப் பட்டும் வருகின்றது. மேலும் இவ்விசாரணை தனது அரசியல் எதிரிகளின் சதி முயற்சி என டிரம்ப் விசனம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்