உலகம்
Typography

இந்தோனேசியாவில் பப்புவா என்ற மாநிலத்தில் உள்ள சோராங் என்ற நகரில் மிகப் பெரிய முதலைப் பண்ணை ஒன்று செயற்பட்டு வருகின்றது.

இப்பணைக்கு அருகே குடியிருப்புக்கள் இருப்பதால் இதனை இடம்மாற்றுமாறு கிராம மக்கள் பல நாட்களாகக் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். ஆனால் பண்ணை நிர்வாகம் இதனைக் கண்டு கொள்ளவில்லை. விளைவு 292 முதலைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

சில நாட்களுக்கு முன்பு இந்த முதலைப் பண்ணைக்கு அருகே புற்கள் அறுத்துக் கொண்டிருந்த 48 வயதுடைய சுகிட்டோ என்பவரை ஒரு முதலை காலில் கடித்துள்ளது. அதனிடம் இருந்து உயிர் தப்ப தவறுதலாக முதலைப் பண்ணைக்குள் நுழைந்த அந்த நபரை முதலைகள் தமது இஷ்டப் படி வேட்டையாடிக் கொன்று விட்டன. இதனை அறிந்த கிராம மக்கள் கடும் கோபம் அடைந்தனர். பதிலுக்கு பண்ணை நிர்வாகம் பலியான நபருக்கு நிவாரணத் தொகை அளிப்பதாகக் கூறியும் அக்கிராம மக்களின் கோபம் அடங்கவில்லை.

பண்ணையை இடம்மாற்றுமாறு போலிசாரிடம் கோரிக்கை வைத்தனர். பலனேதும் கிடைக்காத நிலையில் திங்கட்கிழமை பலியான சுகிட்டோவின் இறுதிச் சடங்கை முடித்து விட்டு அனைத்து கிராம மக்களும் கையில் கத்தி, அரிவாள் மற்றும் கோடாரி போன்ற கூரிய ஆயுதங்களுடன் முதலைப் பண்ணைக்குள் நுழைந்து கண்ணில் பட்ட அனைத்து முதலைகளையும் குட்டி தாய் என்று பார்க்காது வெட்டிக் கொன்றனர்.

இதில் 292 முதலைகள் வரை பலியாகி உள்ளன. ஒரே நாளில் முதலை இனத்துக்கு ஏற்பட்ட இந்தப் பேரழிவானது இந்தோனேசிய மக்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. தற்போது போலிசார் முதலைப் பண்ணை வைத்திருந்தவர்கள் மற்றும் கிராமத்து மக்கள் என இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்