உலகம்
Typography

அண்மையில் அமெரிக்காவுக்குப் போட்டியாக வர்த்தகப் போரில் ஈடுபட்ட சீனா தற்போது அதில் இருந்து பின் வாங்குவதாகவும் அமெரிக்கப் பொருட்கள் மீது விதிக்கப் பட்ட இறக்குமதி வரியை ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளது.

சமீபத்தில் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு அதிகமான தீர்வை வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார்.

இதற்குப் பதிலடியாக சீனாவும் அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 28% வீதத்துக்கு வரியை உயர்த்தி இருந்தது. இதை அடுத்து சர்வதேச சந்தையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தகப் போர் உருவானது. எனினும் இரு நாட்களுக்கு முன்பு சீன உயர் அதிகாரிகள் அமெரிக்க அதிபர் டிரம்பை நேரடியாகச் சந்தித்துப் பேசி இருந்தனர். இதன் பயனாக அமெரிக்காவுக்குப் போட்டியாக அதிகரித்த தீர்வை வரியை சீனா ரத்து செய்வதாக சீனத் துணைப் பிரதமர் லியூ கி தெரிவித்துள்ளார்.

மறுபுறம் சமீபத்தில் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற் பரப்பில் உள்ள தீவொன்றில் தனது குண்டு வீச்சு விமானத்தை சீனா முதன் முறையாகத் தரையிறக்கியுள்ளது. ஏற்கனவே தென் சீனக் கடற் பரப்பில் சீனாவின் 3 நிலைகளில் கப்பல்களைத் தாக்கி அழிக்கக் கூடிய குரூஸ் ரக ஏவுகணைகள், தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடிய ஏவுகணைகள் அதற்குத் தேவையான தளவாடங்களைக் குவித்து வந்தது. இந்நிலையில் தற்போது தனது குண்டு வீச்சி விமானத்தையும் சீனா அங்கு தரையிறக்கியதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய தீவுகளை சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே மற்றும் தைவான் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்