உலகம்
Typography

இஸ்ரேல் அரசு ஜெருசலேமில் அமெரிக்கத் தூதரகத்தைத் திறக்க முனைந்த காரணத்தால் ஆத்திரமடைந்த பாலத்தீனர்கள் காஸா எல்லையில் கடும் போராட்டம் நடத்தினர்.

இவர்கள் எல்லை தாண்டி வர முற்பட்டதாகக் கூறி இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 52 பாலத்தீனர்கள் கொல்லப் பட்டதாகவும் 2400 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மோசமான சம்பவம் குறித்து வெளியான செய்திகளால் தான் மிகவும் கவலை அடைந்துள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ கட்டரஸ் தெரிவித்துள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டும் என துருக்கி அரசு குற்றம் சாட்டியுள்ளது. 2014 ஆம் ஆண்டு காஸா போருக்குப் பின்பு இப்பகுதியில் நடந்த மிக மோசமான வன்முறை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. திங்கட்கிழமை கிழக்கு ஜெருசலேமில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் தனது கணவரோடு கலந்து கொண்ட அமெரிக்கத் தூதரகத் திறப்பு விழா இடம்பெற்றது.

டிசம்பரிலேயே இந்த முடிவை டிரம்ப் அறிவித்திருந்தார். ஜெருசலேமை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் ஆகிய இரு தரப்பும் தமது தலைநகராகக் கருதி வரும் நிலையில் டிரம்பின் முடிவு பாலத்தீனர்களைக் கோபப் படுத்தியது. இதனால் கடந்த 6 வாரங்களாக இவர்கள் பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதன் போதே வன்முறை வெடித்து இஸ்ரேல் பாலத்தீனர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 52 பேரைக் கொலை செய்துள்ளது.

திங்கட்கிழமை ஜெருசலேமில் திறக்கப் பட்டது அமெரிக்காவின் தற்காலிகத் தூதரகம் ஆகும். முழுத் தூதரகத்தையும் அமைப்பதற்கான இடம் தேர்ந்தெடுக்கப் பட்டு பின்னர் இஸ்ரேல் உதயமானதன் 70 ஆம் ஆண்டு நிறைவு நாளில் டெலி அவீவ் இலிருந்து மொத்த அமெரிக்க தூதரகமும் ஜெருசலேத்துக்கு மாற்றப் பட்டு திறப்பு விழா நடத்தப் படும் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்