உலகம்
Typography

அண்மையில் சிரியாவின் கௌட்டா பகுதியில் அதிபர் அசாத் தலைமையிலான இராணுவமும் ரஷ்யாவும் இணைந்து இரசாயன ஆயுதங்களைப் பாவித்து பொது மக்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டி அமெரிக்கா உட்பட மேற்குலகம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

தற்போது இதற்குப் பதிலடியாக சிரிய அரசப் படைகளுக்கு எதிராகவும், அரசு வைத்திருக்கும் இரசாயன ஆயுதங்களை அழிக்கும் நோக்கத்துடனும் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் அடங்கிய கூட்டுப் படை சிரியாவில் வான் வழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளன.

இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. சனிக்கிழமை தொடங்கிய இந்தத் தாக்குதலில் இதுவரை 110 ஏவுகணைகள் வந்து தாக்கியிருப்பதாக சிரிய அரசு தெரிவித்துள்ளது. முக்கியமாக தலைநகர் டமஸ்கஸ்ஸிலும் அதிகளவு ஏவுகணைகள் வந்து தாக்கியுள்ளன. முன்னதாக சில நாட்களுக்கும் முன் சாரீன் என்ற விஷ வாயுத் தாக்குதலில் சிரியாவில் 200 பேருக்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கலாம் என ஊகங்கள் கிளம்பியுள்ள நிலையில் இதற்கான சான்று தம்மிடம் உள்ளது என பிரான்ஸ் அரசும் அறிவித்திருந்தது.

மேலும் இந்த இரசாயன ஆயுதத் தாக்குதலைத் தடுக்க ரஷ்ய அரசு தவறி விட்டது என்றும் சிரிய அதிபர் அசாத் ஒரு மிருகம் என்றும் சாடியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர் எச்சரித்தது போன்றே சிரிய அரசுக்கு எதிராகவும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகவும் தாக்குதலைத் தொடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் டமஸ்கஸ்ஸில் உள்ள அறிவியல் ஆய்வு மையம் மற்றும் பல சிரிய இராணுவ தளங்கள் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

வெள்ளி இரவு அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து விடுத்த அறிவிப்பின் போது சிரியாவில் ஆபத்தான இரசாயன ஆயுதங்கள் பதுக்கப் பட்டும் தயாரிக்கப் பட்டும் வருகின்றன. இவற்றை அழிக்கும் வரை அமெரிக்க இராணுவம் மற்றும் கூட்டுப் படை சிரியாவில் அதிபர் அசாத்தின் அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் என்றார். மேலும் குழந்தைகளையும் அப்பாவி மக்களையும் கொன்று குவிக்கும் சிரிய அரசுக்கு எதிராக அமெரிக்கா தொடுத்துள்ள தாக்குதலில் ரஷ்யா மற்றும் ஈரான் தலையிடக் கூடாது என்றும் சிரியாவுக்கு ஆதரவாகப் பதில் தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் எச்சரிக்கின்றேன் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்